Friday, June 28, 2013

மறுபிறவி

உடல்வழி சிந்தனைவழி என்று இரண்டு வகையில் இதைப் பற்றி யோசிக்கலாம். ஒருவர் இறந்த பின் மீண்டும் உயிர்பெற்று இவ்வையகத்தில் பிறப்பது அல்லது சிந்தனையில் பெரும் மாற்றம் ஏற்பட்டு எண்ணத்தில் செயலில் தன்னைத் தானே உருமாற்றிக் கொள்வது.

மஹாபாரதத்தில் பாண்டவர்கள் வனவாசம் போவதற்கு முன், வனவாசத்திற்கு பின் என்று சிந்தனையில் பெரிய மாற்றம் கொண்டிருந்தனர். 

வனவாசத்திற்கு முன் பாண்டவர்களிடம் திமிர், தாம் பேரரசை ஆள்கிறோம் என்ற பகட்டு, சூதாடுவது அதுவும் தன் தம்பிகளை முதலில் வைத்து ஆடாமல் சித்தி மகனான நகுலனை வைத்து ஆடுவது, யாருமே கட்டாத வடிவத்தில் சிறந்த மாளிகை கட்ட பெரிய காட்டை அழிப்பது என எல்லாவகையான குணாதிசயங்களை கொண்டிருந்தனர்.

வனவாசத்திற்குப் பின் இந்த குணங்களில் மாற்றம் ஏற்பட்டு நல்ல மனித நேயமுள்ளவர்களாக திரும்பி வந்தனர்.
எந்த நகுலனை வைத்து தர்மன் சூதாடினாரோ அதே நகுலனை காட்டில் நடந்த பிரச்சனையில் தம்பிகளை முதலில் காப்பற்ற வேண்டும் என தோன்றாமல் நகுலனைக் காப்பாற்றுகிறார்.

இதுவே மறுபிறவி எடுத்தது போல்தான். இப்போது, இங்கு, இந்த நாட்டில், மறுபிறவி எடுப்பது என்பது பற்றி தவறான கருத்தை திணித்துக் கொண்டிருக்கின்றனர். 

மறுபிறவி எடுப்போம் சிந்தனையில், செயலில்.

Monday, June 10, 2013

சொர்க்கம் நரகம்

ஒரு ராணுவ தளபதி புத்தரைப் பார்த்து சொர்க்கம் நரகம் என்றால் என்ன என்று கேட்டான்.

அதற்கு அவரோ "நீ ராணுவ வீரனைப் போல் இல்லையே? ராணுவ தளபதியைப் போல் தோற்றம் இல்லையே" என்றார்.

அதற்கு அவன் கோபப்பட்டு தன் வாளை உருவி புத்தரின் கழுத்தில் வைத்து கொன்று விடுவேன் என்று சொல்லி மிரட்டினான்.

உடனே புத்தர் இதுதான் "நரகம்" என்றார். ராணுவ வீரன் புத்தரின் வார்த்தையை, நரகம் என்றால் என்ன என்பதை புரிந்து கொண்டவனாக "மன்னிக்கவும். நான் மிகப்பெரிய தவறு செய்ய முற்பட்டேன். தவறுக்காக வருந்துகிறேன்" என்றான்.

உடனே புத்தர் இதுதான் "சொர்க்கம்" என்றார்.

சம நிலை

ஒருவர் தனது வீட்டின் வாசலில் அமர்ந்து செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் வளர்த்த பூனை ஒரு எலியைப் பிடித்து உண்ண ஆரம்பித்தது. எலி கதர கதர பூனை தின்று முடித்தது. இதைப் பார்த்ததும் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.

மற்றொரு நாள் இதே பூனை அவர் வளர்த்த கிளியைப் பிடித்து உண்ண தொடங்கியது. இவர் உடனே கிளியை காப்பாற்ற பூனையை விரட்ட ஆரம்பித்தார். பூனையோ கிளியை விடவில்லை. முழுவதும் தின்று முடித்தது. இவர் மிகவும் வருத்தப்பட்டார்.

மற்றொரு நாள் இந்த பூனை ஒரு குருவியை பிடித்து உண்ண தொடங்கியது. இதைப் பார்த்தவர் எந்த வித சலனமும் உணர்வும் இல்லாதவராக கண்டுகொள்ளாமல் இருந்தார்.

தனக்கு வேண்டாத எலியைப் பிடித்து உண்ணும்போது மகிழ்ச்சி, வேண்டிய கிளியைப் பிடித்து உண்ணும்போது வருத்தம், வேண்டிய வேண்டாத இப்படி எதுவுமே இல்லாத குருவியை உண்ணும்போது உணர்வற்ற நிலை. அப்போது தான் பூனைனா இப்படித்தான் எதையாவது திங்கும் என்றும் அதன் இயற்கை சுபாவமே அதுதான் என்றும் உணர்ந்தார்.

இந்த உலகில் ஒவ்வொருவரும் அவரவர் நிலையில் இருப்பார்கள். அவர்களுக்காக நாம் உணர்ச்சி வசப்பட்டாலோ பதில் சொல்ல ஆரம்பித்தாலோ நம் வாழ்வின் முழு நேரமும் அதைத்தான் செய்து கொண்டிருப்போம்.

Monday, May 13, 2013

மரணம்

மரணம் என்பது ஒரு நிகழ்வு அல்லது சம்பவம். அதைக்கண்டு வருத்தப் படுவதும் வேதனைப் படுவதும் மனிதனின் இயல்பு. ஆனால் அந்த இடத்திலேயே தங்கிவிட முடியாது. எல்லோருக்கும் இந்த சம்பவம் என்றாவது ஒரு நாள் நிகழும். 

வாழ்க்கை என்பது மகிழ்ச்சியாக வாழ்வதற்கே. அதனால் எது நடந்தாலும் நான் மகிழ்ச்சியாக இருப்பேன்னு நம்புங்க இல்லை உங்களுக்குள்ளேயே சொல்லிக் கொள்ளுங்கள்.

புத்தன் இதைப் பற்றி சொல்லும் போது நாம் பிறந்த நாளிலிருந்து இன்று வரை எவற்றை சேர்த்தோமோ அவைகள் மரணத்தில் பிரிந்து செல்லும். அதாவது நான்கு பூதங்களான நீர், நிலம், காற்று மற்றும் நெருப்பு என்பவற்றை சேர்த்தோம். மரணம் என்ற சம்பவம் நிகழ்ந்த பின் நெருப்பிட்டு எரியூட்ட மண்ணோடு சேர நீருற்றி அணைக்க காற்றோடு கலந்து விடுகிறது.

இந்து மதத்தில் ஐந்தாவதாக ஆகாயம் சேர்க்கப் பட்டிருக்கிறது. நிருபிக்கப் படாத எதையிம் புத்தன் சேர்க்க விரும்பவில்லை.

முக்தி

புத்தர் ஒரு கிராமத்தில் பேசும்போது கூட்டத்திலிருந்து மக்களை நோக்கி முக்தி பெறுவது சுலபம் என்றார். இதைக் கேட்ட ஒருவன் எந்த அளவு சுலபம் எனக்கேட்க அதற்கு புத்தர் வானில் இருந்த நிலாவைக் காட்டி இப்படி நிலாவைப் பார்ப்பதை விட சுலபம் என்றார். அவன் எப்படி என்று கேட்க பிறகு பதில் சொல்கிறேன் என்றார்.

கூட்டம் முடிந்தது. கேள்வி கேட்டவனை அழைத்து இந்த கிராமத்தில் இருக்கும் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று அவர்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டு எழுதிவிட்டு நாளைய கூட்டத்திற்கு வந்து சொல் என்றார்

அவனும் மறுநாள் வந்து ஒவ்வொருவரும் என்ன வேண்டும் என்று கூறியதை புத்தரிடம் சொன்னான். புத்தன் அவனைப் பார்த்து யாராவது முக்தியடைய வேண்டும் என்று கேட்டிருக்கிறார்களா எனக்கேட்டார்.

அதில் ஒருவரும் முக்தி அடைய வேண்டும் என்று கேட்கவில்லை என்றான். இப்போது புரிகிறதா? முக்தியடைவது வெகு சுலபம். ஆனால் யாரும் அதை விரும்ப மாட்டார்கள் என்றார்.

Sunday, May 12, 2013

ஆசையே துன்பத்திற்கு காரணம்

ஆசையே துன்பத்திற்கு காரணம். அப்படி என்றால் அதே ஆசை தான் இன்பத்திற்கும் காரணம். இப்போ ஆசைப்படக்கூடாதா இல்லை ஆசைப்படலாமா ?

பெரிய கேள்வி இது. ஆனால் இதனுள் இருக்கும் கருத்தைப் புரிந்து கொள்ள சிரமமாக இருக்கலாம். சிலர் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.

எந்த துன்பமும் சில நொடிகளில் இன்பமாக மாற வாய்ப்புண்டு. அதே நேரத்தில் எந்த இன்பமும் சில நொடிகளில் இன்பமாக மாறும்.

சிக்கலான மகப்பேறு மனைவிக்கு ஏற்பட்டால் துன்பம், கஷ்டம் என்கிறோம். அதே விசயம் குழந்தை பிறந்து இருவரும் நலம் என்று வரும் போது இன்பமாக மாறுகிறது.

நம் வாழ்க்கையில் எந்த ஒரு செயலை செய்யும் போதும் இன்பத்தை நோக்கியே பயணிக்கிறோம். அதே செயலால் துன்பம் வந்தால் அதையும் ஏற்றுக் கொள்ளும் மனம் வேண்டும். 

புத்தன் ஆசைதான் துன்பத்திற்குக் காரணம், அது நம் எண்ணங்களில் இருந்து உருவாகிறது, இந்த எண்ணங்கள் நம் மனதின் வெளிப்பாடு, மனம் எப்போதும் எண்ணங்களை வைத்துக் கொண்டேயிருக்கும் என்று உணர்ந்தார். மனதைக் கட்டுப்படுத்தவது முடியாத காரியம். அதனால் அந்த மனதிலிருந்து விலகி இருங்கள் என்ற கருத்தை முன்வைத்தார்.

Saturday, May 11, 2013

புத்தன் சொன்னது

இன்று புத்தன் சொன்ன விசயங்களை கருத்துக்களை அவருக்கு முன் யாரோ சொன்னது என்றும், புத்தனுக்கு இந்த மரியாதை கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்றும் கேள்வி கேட்கின்றனர்.

அவர்கள் முன் வைத்தது சித்தர்களும், ஆழ்வார்களும் இன்னும் பல ஞாநிகளும் என்று.

புத்தன் வாழ்ந்த காலம் கி மு 500. அதன் பின்னே தான் இவர்கள் சொன்ன அத்தனை பேரின் காலமும் வருகிறது. இன்னும் சொல்லப்போனால் எல்லாருமே கிறிஸ்து பிறந்த காலத்திற்குப் பின் வாழ்ந்தவர்கள்.


என்ன சொல்வது இவர்களிடம் ?

Wednesday, April 17, 2013

பார்வை


சீதையை தேடி ராமனும் லட்சுமணனும் காட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்கள். சாப்பிடாமலும் தூங்காமலும் இருவரும் வெகு நாட்களாக நடக்கின்றனர். அப்போது சபரி என்ற பெண் இவர்களை அணுகி ராமனைப் பார்த்து நில் என்று சொல்ல ராமனும் எதுவும் பேசாமல் நின்றான். பின் கிழே உட்கார் என்றதும் ராமனும் கிழே அமர்ந்தான்.  அந்தப் பெண் ராமனை நோக்கி நீ இப்போது பசியோடு மிகவும் களைப்பாக இருக்கிறாய், நான் உனக்கு பழங்கள் தருகிறேன், சாப்பிட்டு சிறிது நேரம் இளைப்பாறி விட்டுச் செல் என்றாள்.

பின் தன் கையில் இருந்த பழத்தை சிறிது கடித்து விட்டு ராமனிடம் தந்தாள். இரண்டாவது பழத்தை கடித்தாள். தூர வீசினாள். மூன்றாவது பழத்தை கடித்துப் பார்த்து லட்சுமணனிடம் தந்தாள்.

லட்சுமணன் இதைக் கண்டு மிகவும் கோபம் அடைந்து நீ காட்டில் வாழும் ஒரு அரக்கி, நீ கடித்த பழத்தை எப்படி எனக்கு கொடுக்கலாம். இது பரவாயில்லை. எப்படி என் அண்ணன் அயோத்தியின் இளவரசன் ராமனுக்கு கொடுக்கலாம். உன் வாயில் இருந்த எச்சி விஷமாகக் கூட இருக்கலாம், அதைச் சேர்த்து எப்படி தரலாம் என்று அவளைத் திட்டினான்.

அதற்கு ராமன் லட்சுமணனை நோக்கி காட்டில் மிகுந்த ஆயுதங்களுடன் நாம் இருப்பதை பார்த்தால் எந்த பெண்ணும் நம்மை அணுக மாட்டாள். அப்படி இருக்க இவள் நம் எதிரே வந்தாள் என்றாள் இவள் வீரமிக்கவள். நம்மை தாக்குவதற்குப் பதில் பணிவாக பேசி உண்ண உணவு கொடுக்கிறாள் என்றாள் இவள் பாசமிக்கவள். அதனால் தான் அவள் சொல்வதற்கேல்லாம் நான் மறுப்பேதும் சொல்லவில்லை.

முக்கியமாக அரண்மனையில் கிடைக்கிற வசதியை நீ எப்படி இவளிடம் எதிர்பார்க்கலாம் ? நான் மன்னன் என்று அவளுக்கேப்படி தெரியும். நாட்டில் தானே நான் மன்னன். இங்கே இப்போது நான் ஒன்றும் இல்லாதவன் தானே. நீ அரண்மனையில் எப்படி இருக்கிறாயோ அதே பார்வை கொண்டு அவளைப் பார்க்கிறாய். அது தவறு, அந்த கண்ணோட்டத்தோடு பார்க்காதே என்று சொல்லி அதனால் தான் நீ லட்சுமணனாகவும், நான் ராமனாகவும் இருக்கிறோம் என்றான்.

எல்லாமே நாம் பார்க்கும் பார்வையில் இருக்கிறது.


Thursday, April 11, 2013

வாழ்க்கையே அலை போலே

வாழ்க்கையே அலை போலே நாமெல்லாம் கரை மேலே
ஓடம் போலே மகன் வந்து சேர்ந்தான் வாழ்நாளிலே!!!

அன்பு என்னும் காற்றிலே அறிவு கலந்த மூச்சிலே
தாயும் தந்தையும் கூடுவார்... அகம் மகிழ்வார்... பிரம்மம் காணுவார்...
நாளை உலகில் பிறக்கும் உயிரை... யாம் காணுவோம்.

..வாழ்க்கையே அலை போலே

வாழ்க்கை இப்போ செழிப்பதேன்
மகனை கண்டு மகிழ்வதேன்
மழலை இன்று தவழுமா... நாளை தாவுமா... முகம் காணுமா...
காலம் நமக்கு பதில் சொல்லுமிங்கே ... யாம் காணுவோம்.

..வாழ்க்கையே அலை போலே

பாசத்தின் அளவு மீறினால்
மகனின் ஓட்டம் மேவுமோ
வாழ்வில் துன்பம் வரவு...சுகம் செலவு...இருப்பது கனவு
காலம் கடந்த மகனின் வாழ்வை... யாம் காணுவோம்.

..வாழ்க்கையே அலை போலே

Thursday, March 21, 2013

பசுவும் பன்றியும்

பசு உயிருடன் இருக்கும் போது மனிதனுக்கு பால் தந்து உதவுகிறது. அதற்கு பிரதிபலனாக அதை பராமறிப்பதும் காலநேரம் பார்த்து உணவு அளிப்பதும் மனிதன் பார்த்துக் கொள்கிறான்.

பன்றி இறந்த பின் உணவாகவும், பின் அதன் தோலை சுத்தம் செய்து மனிதன் பயன் படுத்திக் கொள்கிறான்.

இங்கே இரண்டுமே மனிதனுக்கு பயன்பட்டாலும் உயிருடன் இருக்கும்போது உதவுகின்ற பசுவுக்கு கிடைக்கின்ற மரியாதை பன்றிக்கு கிடைப்பதில்லை.

ஆக வாழ்க்கையில் உயிருடன் இருக்கும் போதே பிறருக்கு பயனுள்ள வாழ்க்கை வாழ வேண்டும்.

Wednesday, March 20, 2013

அகத்தாய்வு

ஒவ்வொரு மனிதனும் தன்னை அகத்தாய்வு செய்து மூன்றாவது மனிதனை கண்டுகொள்ள வேண்டும். யாரந்த மூன்றாவது மனிதன் ?

என்னைப் பற்றி நான் என்ன நினைக்கிறேன் என்பது முதல் மனிதன், என்னைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பது இரண்டாவது மனிதன், நம் இருவருக்கு நடுவில் இருக்கும் மூன்றாவது மனிதனை ஒவ்வொருவரும் அடையாளன் கொண்டு வந்தால் இந்த நாட்டில் பிரச்சனைகள் வர வாய்ப்பில்லை.

தி மு க ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லிவிட்டு ஊர் திரும்பிய தென்மாவட்ட கட்சி தொண்டர்களின் வண்டி விபத்துக்குள்ளாகி சிலர் உயிருக்கு போராடினர். அதிகாலை என்பதால் யாரும் கவனிக்கவில்லை. சிறிது நேரத்தில் அங்கு வந்த சில இளைஞர்கள் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று எல்லா வசதிகளையும் செய்து கொடுத்து அவர்கள் உறவினருக்கும் சொல்லி அவர்கள் தங்க இடமும் உணவும் கொடுத்து குணமாகி மீண்டும் ஊருக்கு செல்லும் வரை பார்த்துக் கொண்டனர். விபத்தில் சிக்கியவர்கள் தி மு க வைச் சேர்ந்தவர்கள். அவர்களை காப்பாற்றியவர்கள் அ தி மு க வைச் சேர்ந்தவர்கள். கட்சி பெரிதல்ல மனிதம் தான் பெரியது என்று நினைத்ததால் இவர்கள் காப்பாற்றப் பட்டார்கள்.

மதுரையில் இமாம் அலி ஹைதர் அலி என்ற தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த இருவர் காவல் துறையினரை சுட்டுவிட்டு தப்பி ஓடினர். பைபாஸ் சாலை வழியாக ஓடும் அவர்களை காவல்துறையினர் பின்னால் துரத்திக் கொண்டு வந்தனர். இப்படி துரத்தும் வேளையில் பக்கத்தில் இருந்த பள்ளிக் கூடத்திலிருந்து குழந்தைகள் வெளியே வர அதில் இரு குழந்தைகள் தவறி கீழே விழுந்து விட்டனர். ஓடிக் கொண்டிருந்த தீவிரவாதி இரு குழந்தைகளையும் தூக்கி சாலையின் ஓரமாக விட்டுவிட்டு மீண்டும் ஓடத் தொடங்கினர்.

ஒரு வயதான பாட்டி உடம்பு சரியில்லாமல் கஷ்டப்பட்டார். பக்கத்து வீட்டிலிருந்தவர் ஆட்டோவை அழைத்து வரச் சென்றார். நடுராத்திரி என்பதால் 30 ரூபாய் வாங்க வேண்டிய சவாரிக்கு 250 ரூபாய் கேட்டான் அந்த ஆட்டோ ஓட்டுனர். வேறு வழியில்லாமல் ஒத்துக்கொண்டு அழைத்து வந்தார். பாட்டியை தூக்கி ஆட்டோவில் வைக்க உதவினான் ஆட்டோ ஓட்டுனர். மருத்துவமனைக்கு சென்று ஆட்டோவிலிருந்து தூக்கி உள்ளே அழைத்துச் செல்லவும் உதவினான். இப்போ பைசா கொடுத்த போது வாங்க மறுத்தவனாய் இது பாட்டிக்கு செய்த உதவியாக இருக்கட்டும் என்றான் அவன். அதிக பணம் கேட்டது முதல் மனிதன். மூன்றாம் மனிதன் விழித்துக் கொண்டது மருத்துவமனையில் (தென்கச்சி சுவாமி நாதன் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சி).

மனசு


மனசை அடக்க நினைத்தால் அலையும். அறிய நினைத்தால் அடங்கும்.

அதனால் மனசை அடக்க முயற்சிப்பது அதனோடு போராடுவதேல்லாம் முடியாத காரியம். ஒருவன் மனசை அடக்குவேன் என்று மரத்தடியில் உட்கார்ந்து தவம் பண்ணினான். தினமும் காலை 8 மணிக்கு அந்த வழியாக நடனம் கற்றுக்கொள்ளும் ஒரு பெண் கடந்து செல்வது வழக்கம். முதல் நாள் இவன் தவம் இருக்கும் போது இந்தப் பெண் கடந்து செல்வதை கண்டான். ஆஹா மனசை கட்டுப்படுத்தலாம்னு இங்க வந்தா இவள் நடந்து போறத பார்க்கிறோமே என்று ஒரு துணியை எடுத்து கண்ணைக் கட்டிக்கொண்டான். மறுநாள் அந்த பெண் நடந்து வர அவளின் கொலுசு சத்தம் இவன் காதில் விழுந்தது. இவனோ ஒரு துணியை எடுத்து காதை பொத்திக் கொண்டான். மறுநாள் அவள் தலையில் அணிந்திருந்த மல்லிகைப்பூ மனத்தை மூக்கு நுகர்ந்தது. உடனே இவன் இன்னொரு துணியை எடுத்து மூக்கையும் அடைத்துக் கொண்டான். இனிமேல் மனசை சுலபமாக கட்டுப்படுத்தலாம் என்று யோசித்தவனாக தவத்தை தொடர்ந்தான். மறுநாள் 8 மணியானதும் இந்நேரம் அவள் நடந்து போயிருப்பாள் என்று இவன் மனம் யோசிக்க ஆரம்பித்ததாம்.

அதனால் மனசை கட்டுப்படுத்த முடியாது. ஒன்று அதை விட்டு விலகி வரணும். இல்லை அதைப் பற்றி அறிய முற்படனும்.

Tuesday, March 19, 2013

கொலை - தற்கொலை



பாரதப் போரில் கர்ணன் கை ஓங்க தருமரை ஓட ஓட விரட்டினான். தன் முகாமிற்கு திரும்பி வந்த தர்மர் மிகுந்த கோபத்துடன் தூதுவனை அழைத்து அர்ஜுனனிடம் சென்று எப்படியாவது கர்ணனை கொன்று விட்டு வருமாறு சொல் என்றார். ஆனால் கர்ணனை கொல்ல அம்பு தொடுத்த அர்ஜுனன் என்னால் கர்ணனை கொல்ல முடியவில்லை, கர்ணனின் முகம் என் அண்ணன் தர்மர் போல் தோன்றுகிறது, அவன் தோள் என் அண்ணன் பீமன் போல் இருக்கிறது, அவன் பாதங்கள் என் தாயின் பாதங்களைப் போல் இருக்கிறது என்று முகாமிற்கு திரும்புமாறு கிருஷ்ணனுக்கு ஆணையிட்டான்.

கர்ணனை கொல்லாமல் முகாமிற்கு வந்த அர்ஜுனனை கண்டு தர்மர் மிகவும் கொதித்துப் போய் அர்ஜுனனின் வில்லையும் அம்பையும் இழித்து ஏளனமாக பேசினார். தன் வில்லையும் அம்பையும் ஏளனமாய் யார் பேசினாலும் கொள்வேன் என்று அர்ஜுனன் ஏற்கனவே சத்தியம் செய்திருந்தான். அதனால் கோபமுற்ற அர்ஜுனன் தருமரை நோக்கி உங்களை கொள்வேன் அப்படியே நானும் தற்கொலை செய்து கொள்வேன் என்று சபதம் எடுத்தான். வில்லை எடுத்து அம்பு தொடுக்க ஆயத்தமானான். அப்போது கிருஷ்ணன் இடையில் புகுந்து, கர்ணன் உன் அண்ணனைப் போல் தோன்றுவதால் அவனை கொல்ல மனமில்லை என்று சொல்லிவிட்டு இங்கே வந்தாய். இப்போ உன் அண்ணனையே கொல்ல துணிந்து விட்டாயே எனக்கேட்டான். அதற்கு அர்ஜுனன் நான் சத்தியம் செய்துவிட்டேன். அதனால் கண்டிப்பாக என் அண்ணனை கொலை செய்ய வேண்டும், அவரும் இறந்து விடுவார், பின் அண்ணனை பரிந்து நானும் உயிரோட இருக்க மாட்டேன் தற்கொலை செய்து கொள்வேன் என்றான்.

அதற்கு கிருஷ்ணன், உன் அண்ணனை கொலை செய்ய வேண்டும் ஆனால் அவர் உயிருடன் இருக்க வேண்டும் அவ்வளவு தானே! நான் அதற்கு ஒரு வழி சொல்கிறேன் கேட்பாயா என்றான். அர்ஜுனனும் சம்மதித்தான். உன் அண்ணனை நீ வா போ என்று ஒருமையில் மரியாதை இல்லாமல் பேசு, அப்படி பேசினால் கொலை செய்வதற்கு சமம் என்றான். அர்ஜுனனும் அப்படி பேசினான். கொலை செய்வேன் என்று சொன்ன சத்தியத்தை காப்பாற்றி விட்டோம் என சந்தோசப் பட்டான் அர்ஜுனன். இப்போ தற்கொலை செய்வேன் என்று சபதம் எடுத்தேனே அதற்கு என்ன செய்ய வேண்டும் எனக்கேட்டான். அதற்கு கிருஷ்ணன் உன்னையே நீ உயர்வாகவும் தற்பெருமையாகவும் பேசு. அது தற்கொலைக்கு சமம் என்றான். அர்ஜுனனும் என் வில்லைவித்தைக்கு இணை யாரும் இல்லை. நான் பெரியவன், என்னை நம்பி தான் இந்த பாராத போர் நடக்கிறது என்று பெருமையாக பேசிக் கொண்டான்.

இவ்வாறு நீ வா போ என்று பேசினால் கொலைக்கு சமம் என்றும் தற்பெருமையாக பேசினால் தற்கொலைக்கு சமம் என்றும் விளக்கம் அழித்தான் கிருஷ்ணன்.

அரிய குணம் - டால்ஸ்டாய் - அஷுடோஷ் முகர்ஜி

டால்ஸ்டாய் (Tolstoy) உலகப்புகழ் பெற்ற மிக அருமையான எழுத்தாளர். சிந்தனையாளர்.  இவரின் "போரும் சமாதானமும்" மிகவும் புகழ் பெற்றது. இவரிடம் மிகவும் அரிதான குணாதிசயம் இருந்தது.  இவர் தன் எழுத்தினால் பெறும் வருமானம் போதாது என்பதால் வேறு உடல் உழைப்பு செய்து சம்பாதிப்பார்.

ஒருமுறை டால்ஸ்டாய் ரயில் நிலையத்திற்கு ஒரு வேலையாக வந்திருந்தார். அப்போது ஒரு பெண் இவரிடம் தன் கணவர் தண்ணீர் எடுக்க கீழே இறங்கியதாகவும் இன்னும் வரவில்லை என்றும் கண்டுபிடித்து கொடுத்தால் பணம் தருவதாகவும் சொன்னாள். இவரும் அலைந்து திரிந்து அவள் கணவரை கண்டுபிடித்து அவளிடம் சேர்த்தார். அவள் சொன்னபடி பணம் நீட்ட இவரும் வாங்கிக் கொண்டு கிளம்பினார். அப்போது நிலையத்தில் இருந்த ஊழியர் அந்த பெண்ணைப் பார்த்து இவர் யாரென கூற உடனே அந்தப் பெண் ரயிலிலிருந்து கீழிறங்கி மன்னிப்பு கேட்டாள். அதற்கு டால்ஸ்டாய் கொடுத்த பணத்தை திரும்ப கேட்காதே. ஏன்னா அது என் உடலுழைப்பால் சம்பாதித்தது. தரமாட்டேன் என்றார். தன் கௌரவத்தை பற்றி கவலைப்படாமல் எந்த வேலையையும் செய்ய தயாராக இருந்தார். 

கொல்கொத்தாவில் பிறந்து வளர்ந்த அஷுடோஷ் முகர்ஜி (Ashutosh Mukherjee) என்பவர் ஒரு பிராமணர். தலைமை நீதிபதியாக இருந்தவர். இவர் காலை 4 மணிக்கே எழுந்து கங்கை நதியில் நீராடிவிட்டு ஈரத்துணியுடன் வீடுவரை நடந்து வருவதை வழக்கமாக வைத்திருந்தார். 

ஒரு நாள் அவர் நீராடிவிட்டு திரும்பி வரும்போது வயதான பாட்டி சிறப்பு பூஜை செய்துவிட்டு ஒரு ஏதும் இல்லாத ஏழை பிராமணன் ஒருவனுக்கு தானம் பண்ணவேண்டும் என்று காத்திருந்தாள். அந்த நேரம் இவர் அங்கு வர தானம் வாங்கிச் செல்லுமாறு கேட்டாள். நீதிபதியும் அதன்படியே தானம் வாங்கிவிட்டு செல்லும்போது அவரை பற்றி அருகில் இருந்தவர்கள் இவர் தலைமை நீதிபதி இவருக்கு போய் தானம் செய்தாயே என்று கூறினர்.

பாட்டி மன்னிப்பு கூறினாலும் நீதிபதியோ உனக்கு வேண்டியது தானம் பண்ணவேண்டும். பண்ணினாய், நானும் வாங்கிக்கொண்டேன். திரும்ப கேட்க கூடாது என்றார்.

இருவேறு கால கட்டத்தில் வேவ்வேறு இடங்களில் வாழ்ந்த இந்த இருவரின் செயலும் ஒரே மாதிரியாக இருக்கிறது. இது அரிய குணங்களில் ஒன்று.

Tuesday, March 12, 2013

கிருஷ்ணன் - அஸ்தினாபுரம்


பாண்டவர்களுக்கு நாட்டை திரும்ப தரவேண்டும் என்று துரியோதனனிடம் தூது செல்ல கிருஷ்ணன் அஸ்தினாபுரத்திற்கு வந்தான். நாட்டின் எல்லையிலேயே தேரை நிறுத்தி விட்டு நடந்து உள்ளே வருகிறான். ஒவ்வொரு வீடாக பார்த்துக் கொண்டே எந்த வீட்டில் தங்கலாம் என்று யோசித்துக் கொண்டே வருகிறான்.

வழியில் ஓவ்வொருவரும் தங்கள் வீட்டில் வந்து தங்குமாறு அழைக்கின்றனர்.

துரோணர் கிருஷ்ணனை பார்த்து "வா கிருஷ்ணா வா, இது என் வீடு. இங்கே வந்து தங்கலாம்" என்று அழைக்கிறார். பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு அவர் வீட்டைக் கடந்து சென்றவனை பீஷ்மர் நிறுத்தி "கிருஷ்ணா, இது என் வீடு. நீ இங்கே உன் வேலை முடியும் வரை எவ்வளவு நாள் வேண்டுமானாலும் தங்கலாம்" என்று அழைக்கிறார். இவர் வீட்டிற்கும் செல்லாமல் மீண்டும் நடந்தவனை கிருபாச்சாரியார் "கிருஷ்ணா, இது என் வீடு. பதவியில் அமர்ந்தவுடன் கட்டிய வீடு.  இங்கே வந்து தங்கலாம்" என்று அழைக்கிறார்.

யார் வீட்டிற்கும் செல்லாமல் மீண்டும் நடக்க ஒரு குடிசை போன்ற அமைப்புள்ள வீட்டை அணுகினான். அங்கேயிருந்த விதுரர் வந்து "கிருஷ்ணா, இது உன் வீடு. நீ இங்கே தங்கலாம்" என்றார்.

உடனே கிருஷ்ணன் அஸ்தினா புரத்தில் எனக்கு ஒருபிடி நிலமோ வீடோ தங்குவதற்கு இல்லையே என்று நினைத்தேன். இதோ என் வீடு. என் வீடு இருக்க, வேறு ஒருவர் வீட்டில் தங்குவது நல்லதல்ல என்று சொல்லி விதுரர் வீட்டில் கிருஷ்ணன் தங்கினான்.

உற்றது சொன்னால் அற்றது பொருந்தும்



காட்டில் வாழும் பாண்டவர்கள் நிறைய சோதனைகளை சந்தித்தனர்.

உற்றது சொன்னால் அற்றது பொருந்தும். போய் சொன்னால் நம் உறவுகள் விலகும், அதே உண்மை சொல்ல உறவினர்கள் நம்மோடு சேர்வார்கள்.

காட்டில் அமித்ர முனிவரின் ஆசிரமத்தில் ஒரு நெல்லி மரம் உண்டு. அதில் பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை ஒரே ஒரு நெல்லிக்காய் உருவாகும். அங்கே வந்த பாஞ்சாலியும் அர்ஜுனனும் அந்த நெல்லிக்கனியை பறிக்க அதைக்கண்ட முனிவரின் சீடர்கள் பன்னிரெண்டு ஆண்டுகள் தவமிருந்த பின் இந்த கனியை அமித்ர முனிவர் உண்பார். வேறு எந்த உணவும் உண்ண மாட்டார். இப்படி தவறு இளைத்து விட்டீர்களே என்று கூறினர்.

உடனே தர்மர் உள்பட எல்லோரும் அங்கே வர கிருஷ்ணனை அழைத்து உதவி கேக்கலாம்னு என்று முடிவாகி தர்மன் கிருஷ்ணனை அழைத்தான். கிருஷ்ணன் வந்து மரத்தில் இருந்து பறித்த நெல்லிக்காய் மீண்டும் மரத்தில் ஒட்டவைக்க ஒரே வழிதான் உண்டு. அது நீங்க ஆறு பேரும் தங்கள் மனதில் உள்ளதை உள்ளபடியாக சொல்லும் போது இந்த நெல்லிக்காய் தானாகவே ஒட்டிக்கொள்ளும் என்றான்.

ஒவ்வொருவராக தங்கள் மனதில் உள்ளதை சொல்ல ஆரம்பித்தனர்.

தர்மர் : எனக்கு பாரதப் போரில் வெல்ல வேண்டும் என ஆசையில்லை. என் லட்சியம் அற வழியில் செல்ல வேண்டும், தர்மம் காப்பாற்றப் பட வேண்டும். சத்தியம் ஜெயிக்கணும். இதை தவிர வேறொன்றும் இல்லை என்றான்.

அர்ஜுனன் : எனக்கு புகழ் பைத்தியம் உண்டு. ஆசை உண்டு. யாராவது என்னை புகழ வேண்டும் என்று நினைப்பேன்.

பீமன் : பிறர் பொருளுக்கு ஆசை கொண்டவன் இல்லை. பிறர் மனைவி பற்றி நினைத்து இல்லை. அவர்களை பெற்ற தாய் போல் எண்ணுவேன். பிறர் கஷ்டம் என் கஷ்டம் போல் எண்ணுவேன்.

நகுலன் : கல்வி, ஞானம், அறிவு இல்லாத படிக்காத மக்களிடம் நான் மரியாதை காட்டுவதில்லை. அவர்கள் மனமில்லாத மலர் போன்றவர்கள்.

சகாதேவன் : தர்மம் எனக்கு சகோதரன். ஞானம் தான் அப்பா. கருணை என் தோழன். சாந்தம் தான் மனைவி. எலும்பு தோலும் ஆன இந்த உறவில் நம்பிக்கை இல்லை.

திரௌபதி : இந்த ஐந்து பொறிகள் போல, ஐந்து புலன்கள் போல ஐந்து பேரை கணவனாக அமைந்திருந்தும் வேறு ஒருவன் என் கணவனாகவில்லையே என் மனம் விரும்பும்.

ஆழ்மனதில் இருந்து உண்மையை சொன்னால் எல்லா கஷ்டமும் நீங்கும். அது போல ஆறு பேரும் சொன்னவுடன் நெல்லிக்காய் மரத்தோடு ஒட்டிக் கொண்டது.


அர்ஜுனன் - விராட பருவம்


காட்டில் இருக்கும் அர்ஜுனனை அவனது தந்தை இந்திரன் தன்னுடன் வந்து இந்திரலோகத்தில் சிலகாலம் தங்குமாறு வேண்டினான். அதற்கு சம்மதித்து இந்திரலோகம் சென்றான். அங்கே ஊர்வசி வந்து நடனமாட அர்ஜுனன் கண்டு மகிழ்ந்தான்.

இதைக்கண்ட இந்திரன் ஊர்வசியை அழைத்து அர்ஜுனன் அறைக்கு சென்று அவனை சந்தோசப்படுத்துமாறு சொல்ல, ஊர்வசியும் சென்றாள். அப்போது அர்ஜுனன் ஊர்வசியை பார்த்து என்ன என்று கேட்க உன் தந்தை தான் என்னை இங்கே அனுப்பி உன்னை சந்தோசப் படுத்த சொன்னார் என்றாள்.

அதற்கு அர்ஜுனன் என் தந்தை உன்னை விரும்பியதால் நீ எனக்கு தாய் முறை வேண்டும், அதனால் நீ இங்கிருந்து செல்லலாம் என்றான். அதற்கு ஊர்வசி உன் தந்தை சொன்னார் என்பதற்காக மட்டும் இல்லை நானும் உன்மேல் ஆசை கொண்டேன் அதனால் ஏற்றுக்கொள் என்று சொன்னாள். மீண்டும் மறுத்தான் அர்ஜுனன். கோபம் கொண்டவளாக அர்ஜுனனைப் பார்த்து என் அழகைக் கண்டு மயங்காமல் என்னோடு உறவு கொள்ளாமல் பேடி போல் நின்றதால் நீ பேடியாக போவாய் என்று சாபமிட்டாள்

இதை கேள்விப்பட்ட இந்திரன் மிகவும் வருந்தி என்னால் இந்த சாபத்தை நீக்க முடியாது. ஆனால் மாற்றி அமைக்க முடியும் என்று சொல்லி நீ பன்னிரெண்டு ஆண்டுகள் வனவாசம் முடிந்த பின் ஒரு ஆண்டு மறைமுக வாசம் இருக்கும்போது இந்த பேடி வேஷம் கொண்டு சாபத்தை கழிப்பாயாக என்றான் இந்திரன்.

Tuesday, January 22, 2013

நபிகள் - ராமன்

குகன் ராமனை சந்திக்கும் போது தேனும் மீனும் கொண்டு வந்தான். அதை ராமன் இவற்றை அருந்தினேன் என்று சொல்லி இந்த உணவு மிகவும் புனிதமானது என்று புகழ்ந்து சொன்னதாக இராமாயணத்தில் வருகிறது.

குகன் மனசு நோகக் கூடாது என்று ராமான் நினைத்ததாக சொல்கிறது.

ஒருமுறை நபிகளிடம் ஒரு பெண் திராட்சைப் பழம் கொண்டு வந்து நீங்கள் மட்டுமே உண்ணுமாறு வேண்டினாள். அவரும் எடுத்து உண்ண ஆரம்பித்து பின் யாருக்கும் பங்கிட்டுக் கொள்ளாமல் முழுவதுமாக சாப்பிட ஆரம்பித்தார். உடனிருந்தவர்கள் ஏன் எல்லோருக்கும் பங்கிடாமல் சாப்பிடுகிறார் என யோசித்தனர்.

சிறிது நேரத்திற்குப் பின் அந்த பெண்மணி சென்றவுடன் உடனிருந்தவர்கள் ஏன் எல்லோருக்கும் கொடுக்கவில்லை எனக்கேட்க ஒரு பழத்தை எடுத்து ஒருவரிடம் கொடுத்து உண்ணுமாறு சொன்னார். அதை சாப்பிட்டவர் தூ புளிக்கிறது எனத் துப்பினார். அந்த பெண் முன்னால் இது போல் நடந்து விடக்கூடாது என்பதால் யாருக்கும் கொடுக்கவில்லை என்றார்.

இரண்டு இடங்களிலும் ஒரே சிந்தனை தான். மற்றவர் மனம் கஷ்டப்படக்கூடாது என்பது தான்.


Monday, January 21, 2013

மந்திரம் - மொழி

இப்போது எல்லா கோவில்களிலும் மந்திரம் சொல்வது எந்த மொழியில் என்று வாக்குவாதம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

வேதங்கள் சொன்ன மொழி ஒலி வடிவமைப்பை கொண்டு உருவானது. இந்த ஒலி அமைப்பை வைத்து மந்திரங்களை திரும்ப திரும்ப சொல்லும் போது ஒரு சக்தி உருவாகிறது.  அது கூடும் இடத்தில் மக்கள் சேருகிறார்கள். பயன்பெறுகிறார்கள்.

அந்த காலத்தில் வேதங்களை எல்லா விசயத்திற்கும் பயன்படுத்தினார்கள். வேதங்கள் மூலம் மந்திரங்களை சொல்லி எந்த காரியம் வேண்டுமானாலும் செய்யலாம். ஒருவரை கொலை செய்யும் அளவிற்கு இந்த மந்திரங்களை பயன்படுத்தலாம்.

ஒவ்வொரு மந்திரமும் இப்படித்தான் உச்சரிக்க வேண்டும் என்று விதி உள்ளது. அதை மீறி உச்சரிக்கும் போது எதிர்பார்த்த நன்மை அடைய முடியாது. உதாரணமாக "Rama" என்று சொல்லும் போது ராமா, ரமா என்று படிக்க வாய்ப்பு உள்ளது. அதனால் தான் இந்த வேதங்களை எழுதக் கூடாது என முடிவு எடுத்தார்கள்.

தமிழ் மொழியிலும் இந்த மந்திரங்களை சொல்லலாம் ஏனென்றால் தமிழும் ஒலி அமைப்பைக் கொண்டு உருவானது.

கோவில் - தாய் - கருவரை

பல கோவில்களில் உள்ளே செல்ல நான்கு வாசல்கள் இருக்கும். இது எந்த வழியில் வந்தாலும் இறைவனை அடையலாம் எனச் சொல்வதற்காக வந்த மரபு.

எந்த நான்கு வழி ?

1. கர்ம யோகம்
2. ராஜயோகம்
3. ஞானயோகம்
4. பக்தியோகம்

கர்மமே கண்ணாக இருப்பது கர்மயோகம். குண்டலினியை பிரணாயாமத்தால் சஹஸ்ராரத்தில் கொண்டு சேர்ப்பது ராஜயோகம். இந்த ராஜயோகத்தால் லயப்பட்ட மனதை கட்டுப்படுத்துவதே ஞானயோகம். கடவுளின் துதி பாடுவது பக்தியோகம். 

இந்த நான்கு வழிகளில் எந்த வழியில் வேண்டுமானாலும் வரலாம் என்பதை விளக்குவதே நான்கு வாசல் அமைக்கப் பட்டது.

இங்கே நான்கு வழி வைத்தவன் கற்பகிரத்திற்கு ஒரே வழி வைத்தான். ஏன் ? கோவிலின் கற்பகிரகம் ஏன் இருட்டாக உள்ளது ? 

கோவிலின் கற்பகிரகம் என்பது ஒரு தாயின் கற்பகிரகத்தை போன்றது. தாயின் கற்பு இருக்கும் இடமும் இருட்டாகத்தான் இருக்கும். இங்கே ஒரே வழி தான் உள்ளே சென்று வருவதற்கு. அதே போல் தான் கோவில் கற்பகிரகமும். 

கற்பகிரத்தின் விமானத்தில் இருந்து காஸ்மிக் கதிர்கள் இந்த கற்பகிரகத்தை வந்தடையும். இப்போது இந்த கதிர்கள் வெளியே செல்ல ஒரே வாசல் உள்ளதால் அதன் வழியே வெளியே செல்லும். நாம் கோவிலுக்குள் செல்லும் போது சட்டையணிந்து செல்லக் கூடாது என்று ஒரு மரபு உண்டு. அப்படி செல்லும் போது இந்த கதிர்கள் நம் உடம்பை தாக்கும். அறிவியல் பூர்வமாக சிந்தித்தால் இந்த கருத்து நன்றாக நமக்குப் புரியும்.

ஒரு உயிர் உருவாவது தாயின் கருவரையில் தான். கோவிலின் கற்பகிரகம் இருக்கும் இடத்திற்கும் கருவரை என்று தான் சொல்கிறோம். அங்கே உருவ வடிவில் இருக்கும் லிங்க வடிவமும் முதன் முதலில் ஒரு தாயின் வயிற்றில் உருவாகும் உயிரின் வடிவமும் ஒன்று போல் இருக்கும். 

இந்த உலகில் உள்ள எல்லா உயிரினங்களுக்கும் பொருந்தும். இந்த உயிர் தோன்றுவதை விளக்குவதற்கு கோவில் சுவற்றில் வெள்ளை காவி நிறத்தில் வண்ணம் அடித்து வைத்தார்கள். 

ஆணின் வெள்ளை நிற விந்து பெண்ணின் காவி நிற அண்டத்தில் செர்ந்து உயிர் உருவாகும் இடம் கருவரை. அதன் முதல் வடிவம் லிங்க வடிவம். அதை கோவில் வடிவத்தில் நம் முன்னோர்கள் அமைத்து வைத்தார்கள்.






Saturday, January 12, 2013

யானை - நரி

காட்டில் வாழும் விலங்குகளில் அறிவுடைய விலங்கு எதுன்னு பார்த்தா நிறைய பேர் நரி தான்னு சொல்றாங்க. ஆனா நரியின் அறிவு வஞ்சனையுடையது என்று பல பேருக்கு தெரியாது.

யானை மிகவும் கணமான மரங்களை தூக்கும் சக்தியிடையது. காட்டின் குறுக்கே ஓடும் ஆற்றைக் கடக்கும் போது தன் தும்பிக்கையை வைத்து ஆழம் பார்த்துவிட்டுத் தான் காலை வைக்கும். இவற்றையெல்லாம் விட கீழே விழுந்த குண்டூசியை எடுக்கும் ஆற்றல் கொண்டது. ஆக தன் அறிவால் பிறருக்கு தீங்கு விளைவிக்காத வண்ணம் நடந்து கொள்ளும்.

ஆனால் நரியோ வஞ்சனை கொண்டது. அதன் அறிவு அதனையும் அதை சார்ந்திருக்கும் இனத்தையும் அழித்துவிடும்.

Friday, January 11, 2013

காந்தியும் அலெக்சாண்டரும்

காந்தியும் அலெக்சாண்டரும் எதிர் எதிர் கருத்துள்ளவர்கள். ஆனால் இவர்கள் இருவருக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது.

காந்தியார் போர் வேண்டாம் என்று சொல்வதோடு அதை முற்றிலும் வெறுப்பவர். கடைசிவரை தன் நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் அகிம்சை வழியில் போராடியவர்.

அலெக்சாண்டர் பல போர்க்களங்களைப் பார்த்தவன். வாழ்நாள் முழுவதும் போர்க்களத்திலேயே கழித்தவன். போர்தான் சரி என்று நினைப்பவன்.

ஒற்றுமை ?

ஒருமுறை அலெக்சாண்டரும் அவன் படையினரும் போர் தொடுக்க ஒரு நாட்டை நோக்கி பாலைவனம் வழியாக சென்று கொண்டிருந்தனர். வெகுதூரம் பயணித்தனர். அப்போது அலெக்சாண்டருக்கு தாகம் ஏற்பட்டது. தன் பையில் தண்ணீர் இல்லாததால் படையினரை நோக்கி யாராவது தண்ணீர் வைத்திருந்தால் தருமாறு வேண்டினான். ஒரு படைவீரனைத் தவிர எல்லோரிடம் இருந்த தண்ணீர் தீர்ந்துவிட்டது. அந்த படைவீரன் தன் பையில் இருக்கும் தண்ணீரை அப்படியே கொடுக்க வேண்டாம் என்று எண்ணி தன் கவசத்தில் ஊற்றி இந்தாருங்கள் என்றான்.

அப்போது அலெக்சாண்டர் தன் படையில் இருக்கும் அனைவரும் தாகத்தோடு தவிப்பதை கண்டு இதை நான் அருந்த மாட்டேன். நீங்கள் அனைவரும் தாகத்தோடு இருப்பது போல் நானும் இருக்கிறேன். எல்லோருக்கும் தண்ணீர் கிடைக்கும் பட்சத்தில் நானும் அருந்துகிறேன் என்றான்.

ஆனால் படைவீரனோ எங்கள் குழந்தைகள் நலனுக்காவது இதை அருந்த வேண்டினான். ஏனென்றால் எங்களுக்கு எதாவது ஆனால் எங்கள் குழந்தைகளை நீங்கள் காப்பாற்றுவீர்கள் அதற்காகவாவது நீங்கள் உயிருடன் இருக்க வேண்டும் என்றான்.

உடனே தண்ணீரை நீட்டுமாறு கேட்டான். படைவீரன் நீட்ட அதை தட்டிவிட்டு பயணத்தை தொடருங்கள் என்று படையினரை ஆணையிட்டான்.

காந்தி ஒரு முறை வேறு ஊருக்கு செல்ல ரயில் நிலையம் வந்தார். வேலைப் பளு காரணமாக தாமதமாக வந்ததால் ரயில் கிளம்பிவிட்டது. அவசர அவசரமாக ஏறும் போது காலில் உள்ள ஒரு செருப்பு கீழே விழுந்தது. அவர் எண்ண நினைத்தாரோ மற்றோரு செருப்பையும் கழற்றி அந்த செருப்பு இருக்கும் இடத்தில் வீசி எறிந்தார். கூட வந்தவர் ஏன் என்று கேட்க ஒரு செருப்பை வைத்துக் கொண்டு நான் ஒன்றுமே செய்ய முடியாது. கீழே இறங்கி அந்த செருப்பை எடுத்து திரும்ப ரயிலில் ஏறும் வலிமையும் எனக்கு கிடையாது. கீழே விழுந்த ஒரு செருப்பை யார் எடுத்தாலும் அவருக்கு பயன்படட்டுமே என்று இந்த செருப்பையும் கழற்றி வீசினேன் என்றார்.

நல்ல தலைவனுக்கு அடையாளமாக இருவரும் விளங்கினார்கள். அலெக்சாண்டர் தன் படைவீரர்களின் நலனுக்காக தானும் தண்ணீர் அருந்தவில்லை. அதேபோல் காந்தியும் மற்றவர் நலனை கருத்தில் கொண்டு மற்றோரு செருப்பையும் கழற்றி வீசினார்.

இருவரும் வேறு எதிர் எதிர் துருவத்தில் இருந்தால் கூட தலைவனுக்கு உண்டான குணத்தில் ஒன்றாக இருந்தார்கள்.

Thursday, January 10, 2013

கிராமத்துல பாட்டு

தானானது தானானது தானானது தானா,
தனதானது தனதானது தனதானது தானா.

இது கிராமத்துல பாட்டு பாட பயன்படுத்துகிற பண், தாளம். கோடங்கின்னு வச்சு அடிச்சிகிட்டு வருவாங்க.

இதற்குள் சில தத்துவங்களை சொல்கிறார்கள்.

தானானது - தான் என்று நினைப்பது தான் தானா? இது உடம்பா உயிரா? தன்னைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பது சரிதானா? தன் பெயர் தான் தன்னோடதா?

தனதானது - உன்னுடையது என்று நினைப்பது உன்னுடையதுதானா? நேற்று எவரிடமோ இருந்தது, இன்று உன்னிடம், நாளை யாரிடமோ?

இதையெல்லாம் சொல்வதாக பாட்டு தன்னகரத்தை பயன்படுத்தி பாடுகிறார்கள்.

தமிழ்ல தாலாட்டு பாடல்


தமிழில் வல்லினம், மெல்லினம், இடையினம் என்று எழுத்துக்களை பிரித்து வைத்து எந்த எழுத்தை எங்கே எப்படி பயன்படுத்துவது என்பதை வாழ்க்கை முறையில் சொல்லியிருக்கிறார்கள்.

வல்லின எழுத்துக்களை வைத்து தாலாட்டு பாடக் கூடாது.  குழந்தைகள் பயப்படும்படி இருக்கும் ஒலி கொண்டது வல்லினம்.

க ச ட த ப ற என்று பாடும் போது கடினமான ஒலி ஏற்படும்.

மெல்லினத்திலும் தாலாட்டு பாட கூடாது.

ங, ஞ, ண, ந, ம, ன என்று மூக்கைப் பிடித்துக் கொண்டும் பாடக்கூடாது. குழந்தை அழும் சூழ்நிலை ஏற்படுமாம்.

ஆதலால் இடையினத்தில் வரும் எழுத்துக்களை வைத்து பாடினால் குழந்தை தூங்க இதமான ஒலி ஏற்படும். இது வல்லினத்தளவு பயமுறுத்தாது, மெல்லினத்தளவு குழந்தைக்கு அடங்கி போகாது. குழந்தையை தூங்க வைக்கும்.

ஆகவே இடையின ரா பயன்படுத்தப் பட்டிருக்கிறது.

ஆராரோ ஆரிராரோ ஆரீராரோ
ஆராரோ ஆரிராரோ ஆரீராரோ

இதிலிம் சில தத்துவங்களை சொல்வது போல் பாடுகிறார்கள்.

ஆராரோ - நீ யாரோ, நான் யாரோ, இங்கு நாம் இருவரும் இணைந்திருக்கிறோம் என்று தாய் குழந்தையைப் பார்த்து சொல்கிறாளாம்

ஆரிராரோ -  யாரை இழந்து யாரை பெறுவோம் என்று சொல்ல முடியாது என்கிறாள்.

ஆரீராரோ - யார் இருப்பார்கள் என்று தெரியாது, இருந்தும் நாம் இருவரும் இணைந்திருக்கிறோம்



புத்தனும் சீடனும்


புத்தர் ஒரு ஊர் வழியாக போய்க்கொண்டிருந்தார். அந்த ஊர் மக்களுக்கு அவரையும் அவரின் எண்ணங்களையும் பிடிக்காது. அதனால் எல்லோரும் சேர்ந்து அவரை வாய்க்கு வந்தபடி திட்டினர். வந்தவன் போனவன் எல்லாம் திட்டி தீர்த்துகொண்டிருக்க அவரது சீடரில் ஒருவரான ஆனந்தனுக்கு ரொம்பவே கஷ்டமாக இருந்தது.

புத்தரிடம் சென்று வேறு ஊருக்கு செல்லலாம் இங்கே ஒரு நிமிடம் கூட இருக்க வேண்டாம் என்றான்.

அதற்குள் மாலை நேரம் ஆக புத்தர் மக்களிடம் வேறு ஊருக்கு வருவதாக சொல்லிவிட்டேன். அங்கே சென்று பிச்சை எடுத்துவிட்டு பிறகு வருகிறேன். அதற்குப்பின் நீங்கள் பேச வேண்டியதை பேசுங்கள் என்றார்.

சீடனோ ஏன் இவ்வளவு பேசுயும் அமைதியாக இருக்கிறீர்கள் என்று கேட்க அதற்கு புத்தர் சொன்னது.

"மக்களுக்கு திட்டுவது மிகவும் பிடித்திருக்கிறது. அவர்கள் வேலையை செய்கிறார்கள். அப்படி திட்டுவதால் சந்தோசமாக இருப்பதாக எண்ணுகிறார்கள். பேசிவிட்டு போகட்டும்.

இவர்கள் பேசுவதால் எனக்கு எந்த பாதிப்பும் இல்லை. அதனால் என் வேலையே நான் செய்கிறேன்" என்றார்.

Wednesday, January 9, 2013

இருமுடி கட்டுவது ஏன்?

ஐயப்ப தரிசனம் மேற்கொள்ளும் பக்தர்கள் இருமுடி கட்டுவது ஏன் என்று யோசிக்க வேண்டும்.

மனிதன் பாவங்களை ஒரு மூட்டையாகவும், புண்ணியங்களை ஒரு மூட்டையாகவும் தலையில் கட்டிக் கொண்டு அலைகிறான் என்பதை சொல்வதாக இருக்கிறது. ஒரு பக்கம் நாம் கடவுளுக்கு என்ன படைக்கிறோமோ அதை புண்ணியமூட்டையாகவும், நம் பாவங்களை எல்லாம் இன்னொரு மூட்டையாகவும் கட்டிக் கொண்டு செல்வதாக அமைக்கப் பட்டிருக்கிறது.

இருந்தாலும் ஏன் அதை தலையில் வைத்து செல்ல வேண்டும் ?

மலைமீது மிகவும் கடினமான பாதை வழியாக பக்தர்கள் ஏறுகின்றனர். அதனால் புவிஈர்ப்பு விசையானது பாதத்தில் மையம் கொள்ளுமானால் இன்னும் கடினமாக இருக்கும். அதைப் போக்க தலைமீது இருபக்கமும் பாரம் இருந்தால் புவிஈர்ப்பு விசையானது தலையில் மையம் கொண்டு மலையேற உதவியாக இருக்கும் என்பதால் இந்த வழக்கம் வந்தது.

பதினெட்டு படிகள் - ஐயப்பன்

பதினெட்டு படி ஏறி ஐயப்ப தரிசனம் காணப்போகும் மக்கள் ஏன், எதற்கு என்ற கேள்வி கேட்டார்களா என்று தெரியவில்லை.

முதல் ஐந்து படி நம் ஞான இந்திரியங்களான கண், காது, மூக்கு, வாய் மற்றும் நாக்கு என்பதை குறிப்பதாகும்.

கண்களால் பார்ப்பது, காதால் கேட்பது, மூக்கினால் நுகர்வது, தோலின் தொடும் உணர்ச்சி இவைகளை அடக்கி ஆளவேண்டும் எனச் சொல்கிறது முதல் ஐந்து படிகள்.

பின் வரும் ஐந்து படிகள் கர்ம இந்திரியங்களான வாக், கை, கால், பாயுரு, உபஸ்தம் என்பதைக் குறிப்பதாகும். இவைகளை கடந்து ஒரு மனிதன் வரவேண்டும் என்பதாகும்.

அதன் பின் வரும் நான்கு படிகள் மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்பதாகும். இவைகளை கடந்து மனிதன் வரவேண்டும் என்பதை சொல்கிறது.

கடைசியில் சத்வகுணம், தமோகுணம், ரஜோகுணம் என்ற மூன்று குணங்களையும் கடந்து வரவேண்டும் என சொல்லப்படுகிறது.

சத்வகுணம் : பாவங்கள், நோய்கள் அற்றவையாகவும், இன்பச்சேர்க்கையாலும், ஞானச்சேர்க்கையாலும் கட்டுப்படுத்துவது. தூய்மையானது.

ரஜோகுணம் : இது விருப்பம் ஆசை சம்பந்தப்பட்டது.

தமோகுணம் : இது தாமதாமாக சிந்திப்பதைக் குறிக்கிறது.  தவறுதலாலும் சோம்பலாலும் உறக்கத்தாலும் அது கட்டுப்படுத்துகிறது.

ஆக மொத்தம் 17 படிகளாயிற்று. இதையெல்லாம் கடந்து பிம்ம நிலையான பதினெட்டாம் படிக்கு வந்தால் இறைவனை தரிசிக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

Friday, January 4, 2013

வால்மீகி - கம்பன் வித்தியாசம்


ராமாயணத்தில் பரதன் காட்டுக்கு வந்து குகனிடம் ராமன் எங்கே எனக் கேட்க அதற்கு குகன் இப்படி பதில் சொல்வான்.

"அல்லையாண் டமைந்த மேனி யழகனும் அவளும் துஞ்ச"

ராமனை புகழ்ந்து பாடிவிட்டு சீதையைப் பற்றி சொல்லும்போது "அவளும் தூங்கினாள்" என்று சொன்னான் கம்பன். அங்கே குகன் சீதையை கண்ணால் கூட கண்டதில்லை என்பதை சொல்லாமல் சொன்னான்.


கோசல நாட்டைப் பற்றி சொல்லும்போது வால்மீகி மிகவும் சொற்ப வார்த்தைகளை பயன்படுத்தி சொன்னதை கம்பன் அதை மிகைப்படுத்தி அங்கிருக்கும் மக்கள் ஐம்புலன்களை அடக்கி வாழ்ந்தனர் என்று புகழ்ந்து பாடுவான்.

ஆசலம் புரி ஐம் பொறி வாளியும்,
தாசு அலம்பு முலையவர் கண் எனும்
பூசல் அம்பும், நெறியின் புறம் செலாக்
கோசலம் புனை ஆற்று அணி கூறுவாம்

வால்மீகி சொன்னது : வாலி சுக்ரீவனின் நாட்டையும் அவன் மனைவியையும் அபகரித்துக் கொண்டு தான் அனுபவித்தான். வாலியை கொன்றபின் பின் அவன் மனைவியை சுக்ரீவன் அந்தப்புரத்து அரசி ஆக்கினான்.

கம்பன் சொன்னது : வாலியை கொன்றபின் அவன் மனைவியை சுக்ரீவன் நாட்டின் அரசமாதாவாக்கினான்.


எல்லா இலக்கியமும் நல் ஒழிக்கத்தைத்தான் கற்றுக் கொடுக்கிறது. இராமயணத்தில் உள்ள இந்த மூன்று இடமும் பெண்ணை தப்பான எண்ணத்துடன் பார்க்கக் கூடாது என்பதையும், ஐம்புலன்களை அடக்கி வாழ வேண்டும் என்பதையும் சொல்கிறது.