ஒருவர் தனது வீட்டின் வாசலில் அமர்ந்து செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் வளர்த்த பூனை ஒரு எலியைப் பிடித்து உண்ண ஆரம்பித்தது. எலி கதர கதர பூனை தின்று முடித்தது. இதைப் பார்த்ததும் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.
மற்றொரு நாள் இதே பூனை அவர் வளர்த்த கிளியைப் பிடித்து உண்ண தொடங்கியது. இவர் உடனே கிளியை காப்பாற்ற பூனையை விரட்ட ஆரம்பித்தார். பூனையோ கிளியை விடவில்லை. முழுவதும் தின்று முடித்தது. இவர் மிகவும் வருத்தப்பட்டார்.
மற்றொரு நாள் இந்த பூனை ஒரு குருவியை பிடித்து உண்ண தொடங்கியது. இதைப் பார்த்தவர் எந்த வித சலனமும் உணர்வும் இல்லாதவராக கண்டுகொள்ளாமல் இருந்தார்.
தனக்கு வேண்டாத எலியைப் பிடித்து உண்ணும்போது மகிழ்ச்சி, வேண்டிய கிளியைப் பிடித்து உண்ணும்போது வருத்தம், வேண்டிய வேண்டாத இப்படி எதுவுமே இல்லாத குருவியை உண்ணும்போது உணர்வற்ற நிலை. அப்போது தான் பூனைனா இப்படித்தான் எதையாவது திங்கும் என்றும் அதன் இயற்கை சுபாவமே அதுதான் என்றும் உணர்ந்தார்.
இந்த உலகில் ஒவ்வொருவரும் அவரவர் நிலையில் இருப்பார்கள். அவர்களுக்காக நாம் உணர்ச்சி வசப்பட்டாலோ பதில் சொல்ல ஆரம்பித்தாலோ நம் வாழ்வின் முழு நேரமும் அதைத்தான் செய்து கொண்டிருப்போம்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.