பாண்டவர்களுக்கு நாட்டை திரும்ப தரவேண்டும் என்று துரியோதனனிடம் தூது செல்ல கிருஷ்ணன் அஸ்தினாபுரத்திற்கு வந்தான். நாட்டின் எல்லையிலேயே தேரை நிறுத்தி விட்டு நடந்து உள்ளே வருகிறான். ஒவ்வொரு வீடாக பார்த்துக் கொண்டே எந்த வீட்டில் தங்கலாம் என்று யோசித்துக் கொண்டே வருகிறான்.
வழியில் ஓவ்வொருவரும் தங்கள் வீட்டில் வந்து தங்குமாறு அழைக்கின்றனர்.
துரோணர் கிருஷ்ணனை பார்த்து "வா கிருஷ்ணா வா, இது என் வீடு. இங்கே வந்து தங்கலாம்" என்று அழைக்கிறார். பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு அவர் வீட்டைக் கடந்து சென்றவனை பீஷ்மர் நிறுத்தி "கிருஷ்ணா, இது என் வீடு. நீ இங்கே உன் வேலை முடியும் வரை எவ்வளவு நாள் வேண்டுமானாலும் தங்கலாம்" என்று அழைக்கிறார். இவர் வீட்டிற்கும் செல்லாமல் மீண்டும் நடந்தவனை கிருபாச்சாரியார் "கிருஷ்ணா, இது என் வீடு. பதவியில் அமர்ந்தவுடன் கட்டிய வீடு. இங்கே வந்து தங்கலாம்" என்று அழைக்கிறார்.
யார் வீட்டிற்கும் செல்லாமல் மீண்டும் நடக்க ஒரு குடிசை போன்ற அமைப்புள்ள வீட்டை அணுகினான். அங்கேயிருந்த விதுரர் வந்து "கிருஷ்ணா, இது உன் வீடு. நீ இங்கே தங்கலாம்" என்றார்.
உடனே கிருஷ்ணன் அஸ்தினா புரத்தில் எனக்கு ஒருபிடி நிலமோ வீடோ தங்குவதற்கு இல்லையே என்று நினைத்தேன். இதோ என் வீடு. என் வீடு இருக்க, வேறு ஒருவர் வீட்டில் தங்குவது நல்லதல்ல என்று சொல்லி விதுரர் வீட்டில் கிருஷ்ணன் தங்கினான்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.