Tuesday, March 19, 2013

கொலை - தற்கொலை



பாரதப் போரில் கர்ணன் கை ஓங்க தருமரை ஓட ஓட விரட்டினான். தன் முகாமிற்கு திரும்பி வந்த தர்மர் மிகுந்த கோபத்துடன் தூதுவனை அழைத்து அர்ஜுனனிடம் சென்று எப்படியாவது கர்ணனை கொன்று விட்டு வருமாறு சொல் என்றார். ஆனால் கர்ணனை கொல்ல அம்பு தொடுத்த அர்ஜுனன் என்னால் கர்ணனை கொல்ல முடியவில்லை, கர்ணனின் முகம் என் அண்ணன் தர்மர் போல் தோன்றுகிறது, அவன் தோள் என் அண்ணன் பீமன் போல் இருக்கிறது, அவன் பாதங்கள் என் தாயின் பாதங்களைப் போல் இருக்கிறது என்று முகாமிற்கு திரும்புமாறு கிருஷ்ணனுக்கு ஆணையிட்டான்.

கர்ணனை கொல்லாமல் முகாமிற்கு வந்த அர்ஜுனனை கண்டு தர்மர் மிகவும் கொதித்துப் போய் அர்ஜுனனின் வில்லையும் அம்பையும் இழித்து ஏளனமாக பேசினார். தன் வில்லையும் அம்பையும் ஏளனமாய் யார் பேசினாலும் கொள்வேன் என்று அர்ஜுனன் ஏற்கனவே சத்தியம் செய்திருந்தான். அதனால் கோபமுற்ற அர்ஜுனன் தருமரை நோக்கி உங்களை கொள்வேன் அப்படியே நானும் தற்கொலை செய்து கொள்வேன் என்று சபதம் எடுத்தான். வில்லை எடுத்து அம்பு தொடுக்க ஆயத்தமானான். அப்போது கிருஷ்ணன் இடையில் புகுந்து, கர்ணன் உன் அண்ணனைப் போல் தோன்றுவதால் அவனை கொல்ல மனமில்லை என்று சொல்லிவிட்டு இங்கே வந்தாய். இப்போ உன் அண்ணனையே கொல்ல துணிந்து விட்டாயே எனக்கேட்டான். அதற்கு அர்ஜுனன் நான் சத்தியம் செய்துவிட்டேன். அதனால் கண்டிப்பாக என் அண்ணனை கொலை செய்ய வேண்டும், அவரும் இறந்து விடுவார், பின் அண்ணனை பரிந்து நானும் உயிரோட இருக்க மாட்டேன் தற்கொலை செய்து கொள்வேன் என்றான்.

அதற்கு கிருஷ்ணன், உன் அண்ணனை கொலை செய்ய வேண்டும் ஆனால் அவர் உயிருடன் இருக்க வேண்டும் அவ்வளவு தானே! நான் அதற்கு ஒரு வழி சொல்கிறேன் கேட்பாயா என்றான். அர்ஜுனனும் சம்மதித்தான். உன் அண்ணனை நீ வா போ என்று ஒருமையில் மரியாதை இல்லாமல் பேசு, அப்படி பேசினால் கொலை செய்வதற்கு சமம் என்றான். அர்ஜுனனும் அப்படி பேசினான். கொலை செய்வேன் என்று சொன்ன சத்தியத்தை காப்பாற்றி விட்டோம் என சந்தோசப் பட்டான் அர்ஜுனன். இப்போ தற்கொலை செய்வேன் என்று சபதம் எடுத்தேனே அதற்கு என்ன செய்ய வேண்டும் எனக்கேட்டான். அதற்கு கிருஷ்ணன் உன்னையே நீ உயர்வாகவும் தற்பெருமையாகவும் பேசு. அது தற்கொலைக்கு சமம் என்றான். அர்ஜுனனும் என் வில்லைவித்தைக்கு இணை யாரும் இல்லை. நான் பெரியவன், என்னை நம்பி தான் இந்த பாராத போர் நடக்கிறது என்று பெருமையாக பேசிக் கொண்டான்.

இவ்வாறு நீ வா போ என்று பேசினால் கொலைக்கு சமம் என்றும் தற்பெருமையாக பேசினால் தற்கொலைக்கு சமம் என்றும் விளக்கம் அழித்தான் கிருஷ்ணன்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.