இரண்டாவதாக மனுசாத்திரம். இதை எழுதியது ஓர் ஆளா, அல்லது பலரா என்பதே விளங்காமல் உள்ள சாத்திரம். உள்ளடக்-கத்தைப் படித்தால் ஒரே காலத்தில் எழுதப்-பட்டது அல்ல என்பது மட்டும் புரியும். மனிதர்கள் பிறக்கும்போதே நான்கு பிரிவுகளாக ஏற்றத் தாழ்வுகள் உள்ளவர்களாகப் பிறப்பிக்கப்-பட்டுள்ளனர் எனும் சமூக அநீதியைக் கற்பிக்கும் சாத்திரம். ரிக் வேதத்தில் புருஷசூக்தம் எனும் பிரிவுகளில் உள்ளவையே இதிலும் உள்ளது. இவை இரண்டிலும் உள்ள பாகுபாடுகளே பகவத் கீதையிலும் இடம் பெற்றுள்ளன என்பதைப் பார்க்கும்போது பலவகையிலும் நம் மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம் தெரியவரும்.
மூன்றாவதாக காமசாத்திரம். காம சூத்ரம் என்றும் கூறுவார்கள். வாத்ஸ்யாயனன் என்பான் எழுதியது. உலகுக்கே இது பற்றிய முதல் நூல் இதுதான் என்று மேலை நாட்டார் மூக்கில் விரல் வைத்துப் பார்க்கின்றனர் என்பார் பார்ப்பனர்கள். வீர்யத்திற்கே காயத்ரி மந்த்ரம் ஜெபிக்க வேண்டிய நிலையில் இருப்பவர்கள் அல்லவா! இப்படித்தான் வாயைப் பிளப்பார்கள்.
ஆயுர்வேத சாத்திரம் என்பது நான்காம் சாத்திரம். மருத்துவம் பற்றிய சாத்திரமாம். அறுவை சிகிச்சைபற்றியெல்லாம் இதில் உண்டாம். பால்கடலைக் கடைந்து ஆலகாலமும் மற்றவையும் வந்தபோது மூதேவியும் சீதேவியும் வந்தபோது, உடன் வந்ததாம் ஆயுர்வேதமும் தன்வந்த்ரியும்! பிறகுதான் அமுதம் வந்ததாம். ஆயுர்வேதமும் தன்வந்த்ரியும் இதுவரை கிழித்தது என்ன? பைத்தியக்காரர்களின் வீடு (விகிஞி பிளிஹிஷிணி) என்று விவேகானந்தரால் வருணிக்கப்பட்ட மலை-யாளத்தில் மட்டும் கொடிகட்டிப் பறக்கும் மருத்துவம். இதை நம்பி அண்ணா, வி.வி.கிரி போன்றவர்களை நவரை, பிழிச்சல் என்று எண்ணெய் வைத்தியம் பார்க்க வைத்தார்கள். வயோதிகத்தை வெளிக்காட்ட விரும்பாத வலிப்பு நடிகர்கள் இன்றைக்கு இந்த மருத்துவமுறைக்கு விளம்பர தூதர்களாகச் செயல்படப் பயன்படுகிறது. மற்றபடி பல்பொடி, தலைமயிர் எண்ணெய், சோப்பு எண்ணெய் என இரண்டொரு உபயோகப் பொருள்களின் விலையைக் காட்டிச் சொல்வதற்கு மட்டுமே ஆயுர்வேதம் பயன்படுகிறது. இதைச் சொல்ல ஒரு சாத்திரமாம்! தேவையா?
அய்ந்தாவதாக வந்துள்ளது வாஸ்து சாத்திரமாம். கோயில்களை எப்படிக் கட்டுவது என்பதுபற்றிய வரைபட விளக்கநூல் இது. ஆகவேதான் இதில் சமையல் அறை (கோயிலில் மடப்பள்ளி) உண்டு. கழிப்பறை கிடையாது. ஏன் என்றால் கடவுளுக்கு மலம் வராது. (மனிதனுக்கும் விலங்குகளுக்கும் வரும்) இந்த சாத்திரத்தை மனிதன் வசிக்கும் வீட்டுக்கானது எனக் கூறிச் சம்பாதிக்கிறார்கள்; ஏமாற்று-கிறார்கள். அதுவும்-கூட இந்நாட்டில் விந்திய மலைக்கு வடக்கே ஒரு வாஸ்து சாத்திரம்; தெற்கே ஒரு வாஸ்து சாத்திரம். இதைப்பற்றிய பித்தலாட்டங்களைத் தனியே பார்க்கலாம்.
மனிதனோடு, மனித வாழ்க்கையோடு இணைந்து, இயங்கும் தத்துவங்களை இந்தியத் தத்துவம் எனக் கூறலாம். அந்த இலக்கணப்படி, சாங்கியம் என்பது ஒரு தத்துவம். கபிலரால் வழங்கப்பட்டது. சாங்கியம் என்றால் எண்ணம் எனப் பொருள். கபிலரைக் கபிலமுனி (KAPILA) என்றாக்கி அவருடைய தத்துவம் சாங்க்யா என்று எழுதி வைத்துக் கொண்டனர் ஆரிய வட-மொழியினர். சாங்கியம் எனக் கபிலர் சொன்னது எண்ணம், எண்ணுதல், சிந்தனை செய்தல், நினைத்தல் என்றெல்லாம் பொருள் கொள்ளலாம். ஆனால் பார்ப்பன சாங்க்யம் என்றால் 1, 2, 3 என எண்ணுதல் (COUNTING) என்று பொருளாம். எப்படிப் பொருத்தம் எனக் கேட்டால், அது மறைந்துவிட்டது என்று கூறிவிடுகிறார்கள். சாங்கியம் என்றால், ஒரு செய்தியை புதுவிதமாக மிகைப்படுத்தாமல் உள்ளது உள்ளபடியே சொல்வதை சாங்கியம் எனலாம். சிந்தனையை ஒழுங்குபடுத்தும் தத்துவ மரபு எனலாம். நினைத்தேன், வந்தாய் எனப் பாடும் பாடலை நினைத்துக் கொள்ளலாம்.
அடுத்தது யோகம். யோகா என்பார்கள். இந்தப் பயிற்சி பெற்றவர்கள் யோகிகள். ஊண் சுருக்கி, உள்ளொளி பெருக்கி, யோகம் எனும் பயிற்சி முறை பயின்று வாழ்பவர்கள். மனமும் உடலும் ஒன்றி செயல்படுவதைத்தான் யோகம் என்கிறார்கள். காலை 4 மணிக்கு எழவேண்டும் என்ற நினைப்போடு படுத்துத் தூங்குபவர்கள் 4 மணிக்கு எழுந்து-விடுவதைப் பார்க்கிறோம். அதைப் பழகியவர்களை யோகி எனலாம்.
மீமாம்சம் என்பது அடுத்த தத்துவம். செயல்முறை வித்தகத்தை மீமாம்சம் எனலாம். விதைக்கப்படும் ஒரு நெல்மணி நூற்றுக்-கணக்கான நெல் மணிகளாகப் பயிரில் செழித்து விளைகிறது அல்லவா, அத்தகைய செயல்வினை ஆற்றுதல் மீமாம்சம்.
ஞாயம் என்கிற தத்துவமுறை எது சரி, எது தவறு எனப் பகுத்துப் பார்த்து முடிவு செய்கிற ஆய்வு முறையாகும். இதைத் தர்க்கம் எனவும் கூறலாம். ஏரணம் என்று மெய்ப்-பொருளைக் காண்பதற்காக விவாதம் நடத்துகிற முறை என்பதாகும். எல்லா மதங்களுமே அவற்றின் நூல்கள் கூறுவதை அப்படியே ஏற்றுக்கொள், நம்பு, அய்யம் கொள்ளாதே, கேள்வி கேட்காதே என்றெல்லாம் மிரட்டு-கின்றன. அதற்கு நேர் மாறாக எதையும் தர்க்கித்து விவாதம் நடத்தி முடிவுக்கு வரவேண்டும் ஞாயத்தை உணர-வேண்டும் என்கிற தத்துவம் நம்முடையது.
பொருள்தான் முதலில் எனப்படும் பொருள்முதல்வாதம் ஒன்று. கருத்துதான் முதலில், பின்னர்தான் பொருள் உருவானது என்பது கருத்துமுதல்வாதம் என்பது மற்றொன்று. பொருள் முதல்வாதம் கடவுளுக்கு வேலை இல்லை என்கிறது. கருத்து முதல்வாதம் அல்லது எண்ண முதல்வாதம் என்பது எல்லாவற்றிற்கும் கடவுளைக் கட்டி அழுவது. பொருள்களின் தன்மைபற்றியும் திரவியங்கள், குணங்கள், இயக்கங்கள் பற்றியும் ஆய்வு செய்த தத்துவம்தான் வைசேஷிகம் எனும் தத்துவம். கணாதர் என்பவர் ஆய்வு செய்த தத்துவம்.
ஆக, இந்த ஆறுவகைத் தத்துவங்களில் வேதாந்தம் வேதத்தைத் தாங்கிப்பிடிப்பது என்பது வெளிப்படையாகத் தெரிந்த சேதிதான். மீதி உள்ளவை வேதத்தைத் தாங்கியவையா தாக்கியவையா என்பதை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம். கடவுள் என்கிற மாயையை எப்படியெல்லாம் மறுத்து கருத்துகள் மேலோங்கியிருந்தன என்பதையும் விரிவாகப் பார்க்கலாம்.
இந்தியத் தத்துவ ஞானம் என்பதற்கு விளக்கம் கூறுவதில் பல சிக்கல்கள் உள்ளன.
காலத்தால் மூத்த கவுடில்யரின் அர்த்தசாத்திரத்தில் (சாணக்கியம்) மூன்று வகை தத்துவங்களைப் பற்றிக் கூறுகிறார். சாங்கியம், யோகம், லோகாயதம் என்பவை அவை. மாத்வாச்சாரியார் 16 தத்துவ ஞானங்கள் இருப்பதாக அவரது சர்வ தர்ஷண சங்கரஹம் எனும் நூலில் கூறுகிறார். ஆனால் இன்றைய தத்துவ ஆசிரியர்கள் கூற்றுப்படி அவை ஒன்பது மட்டுமே. அவையே, நாத்திகப் பகுதி என்றும் ஆத்திகப் பகுதி என்றும் இருபெரும் பிரிவுகளில் அடக்கப்பட்டுள்ளன.
நாத்திகம் என்பது இன்று கடவுளை மறுப்பது எனும் பொருளில் வழங்கப்படுகிறது. கடவுள் எனும் சொல் திருக்குறளில் கையாளப்படாத சொல். அதனை ஏற்பதற்கும் தமிழில் சொல் இல்லை. மறுப்பதற்கும் தமிழில் சொல் இல்லை. நாஸ்திகம், ஆஸ்திகம் எனும் வடசொற்களே தமிழ்ப்படுத்தப்பட்டு வழங்கப் பெறுகின்றன. நாஸ்திக வேத நிந்தக என்றுதான் மனுநூல் விளக்கம் தருகிறது. வேதத்தை ஏற்காதவன் அல்லது மறுதலிப்பவன்தான் நாத்திகன் என்று பொருள்படுகிறது. எனவே இச்சொல்லுக்கும் கடவு-ளுக்கும் தொடர்பு இல்லை.
அப்படியானால், வேத மறுப்புத் தத்துவங்கள், வேத ஏற்புத் தத்துவங்கள் என்றுதான் பிரிக்கப்பட வேண்டும். வேதமறுப்புத் தத்துவங்களாக, லோகாயதம், புத்தம், சமணம் (ஜைனம்) என்ற மூன்றும் வகைப்படுத்தப்படுகின்றன. வேத ஏற்புத் தத்துவங்கள் எனும் பட்டியலில், மீமாம்சம் (உத்தர மீமாம்சம், பூர்வமீமாம்சம்) வேதாந்தம், சாங்கியம், நியாயம், வைசேஷிகம், யோகம் ஆகிய ஆறும் வருகின்றன.
மக்களிடையே பரவியிருந்த தத்துவம் ஆனதால் லோகாயதா என அழைக்கப்பட்டது. மக்கள் மத்தியில் (லோகேசு) பரவியிருந்தது (ஆயுதா) எனப் பொருள். மகிழ்ச்சியாக இருத்தல், பொருள் தேடல், ஆண் பெண் சுகித்தல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தந்து சாவுக்குப் பின் பேரானந்தம் தரக்கூடிய மோட்சம் எதுவும் கிடையாது என்று திட்டவட்டமாக மறுக்கும் கொள்கை கொண்ட மக்கள் லோகாயதவாதிகள்.
உலகாயவாதிகள் சார்வாகக் கொள்கைக்காரர்கள் என்பதுதான் மாத்வர் சொன்ன விளக்கம். பிரகிருதிஜனம் என்று அவர் கூறுகிறார் இந்தக் கொள்கை கொண்டவர்களை. இந்தத் தத்துவத்தைப் பொருள்முதல்வாதம் எனும் பொருள் கொண்ட மெட்டீரியலிசம் எனும் சொல்லால் ஆங்கிலத்தில் கூறுவார்கள். மெட்டீரியலிசம் அல்லது பிரகிருதிவாதம் என்பது தந்தை பெரியார் 70 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதிய நூலின் தலைப்பு.
மகிழ்ச்சியும் இன்பமும் அனுபவிக்கப்பட வேண்டியவை எனும் வாழ்க்கை முறையைச் சிற்றின்பம் எனவும் காமதேனுவும் கற்பக மரமும் ரம்பை ஊர்வசி மேனகா திலோத்தமை போன்ற விலைமகளிர் தாராளமாகக் கிடைக்கும் (விலையில்லாமல் கிடைக்கும்) இடமான புரட்டுக் கற்பனையான பரலோக இன்பத்தைப் பேரின்பம் எனவும் பிரித்த அயோக்கியர்கள் லோகாயதத் தத்துவம்பற்றிய நூல்களை அழித்துவிட்டனர்.
பின்னர், அத்தத்துவம்பற்றிய கண்டனங்களை எழுதிப் பரப்பி விட்டனர். அப்படிப் பரப்புரை செய்யும் நூல்களில் வாதமிடும்போது குறிக்கப்பட்டுள்ள தத்துவங்களைப் பற்றிய சிலவரிகள் மட்டுமே இன்றைய நிலையில் லோகாயதக் கொள்கைகளைத் தெரிவிப்பனவாக உள்ளன.
அபிதான சிந்தாமணியின் உலகாயதம் மதம் பற்றிய விளக்கம் பின்வருமாறு: இவன் நீரிசுவரவாதி. இத்தூலதேகத்தில் எதனால் பல விவகாரங்கள் உண்டாகின்றன? எது நீங்கினால் விவகாரங்கள் நீங்குகின்றனவோ, அதற்குக் காரணமானதே ஆத்மா என்பவன். அவ்வாத்மா ஸ்தூல சரீரத்திற்குப் பின் ஜீவித்தல், மரணமடைதல் இரண்டும் சரீராதீனம், இந்திரியெமே ஆத்மா என்பான். உலகம் பாக்கு, வெற்றிலை, சுண்ணாம்பு இவை கலந்த காலத்து உண்டாகுஞ் சிவப்பு போலவும், விறகைக் கடைந்த கபிலத்து உண்டாகும் நெருப்பு போலவும் உண்டாம். கடவுள், மறுஜன்மம், ஆத்மா என்பன இல்லை என்பவன். உலக இன்பங்களை அனுபவித்து இருப்பதே முக்தியென்பவன்.
ஆக, கடவுள், மறுபிறப்பு, ஆத்மா ஆகியவற்றைக் கற்பனைகள் எனக் கண்டித்து ஏற்க மறுப்பது லோகாயத மதம் அல்லது வாதம்.
லோகம் என்பதை நம் கண்ணால் காணக் கூடியதும் நாம் வாழ்ந்து கொண்டிருப்பதுமான இந்த லோகம் _ இகலோகம் எனப் பொருள் கூறுவதும் உண்டு. இதன் மூலம் பரலோகம் எனும் கற்பனையை ஏற்க மறுத்தவர்கள் என்பது விளங்கும். மாத்வர் இதனைத் தெளிவாகவே கூறிவிட்டார்: லோகாயதவாதிகள் _ மேல் உலகத்தை மறுப்பவர்கள் என்று.
மேல் உலகத்தை மறுக்கிறவர்கள் என்றால் கீழ் உலகத்தையும் மறுக்கின்றவர்கள் என்றுதானே பொருள்படும்? மோட்சம் கிடையாது என்றால் நரகமும் கிடையாது என்றுதானே பொருள்? வேதவாதிகள், நரகத்தைச் சொல்லி அச்சுறுத்தி மோட்சத்தைச் சொல்லி ஆசைகாட்டித் தம் (பொய்த்) தத்துவத்தைச் செலாவணியாக்கி ஏமாந்தவர்களை ஏமாற்றினார்கள். லோகாயதவாதிகள் ஏமாறாதவர்கள்.
துவைதம் பேசிய மாத்வர் கூற்று அப்படியென்றால், அத்வைதம் பேசிய சங்கரன் லோகாயதவாதிகள் அநாகரீக மக்கள் என்று வசை பாடிப் போய்விட்டார். ஆனால் மனுவோ, லோகாயதவாதிகள் வல்லமை மிக்க தர்க்கவாதிகள் என்று சான்று அளித்துள்ளார். இந்த மனு எழுதிய நீதிநூலுக்கு உரை எழுதிய மேதநிதி என்பவர், வேதத்தை எதிர்த்து வாதிடும் வல்லமை பெற்ற திறமையாளர்கள் என்றும் மோட்சம் எனும் பிரமைக்கு (கற்பனைக்கு) மக்கள் இரை ஆகாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ளப் பாடுபடுபவர்கள் என்றும் நற்சான்று வழங்கியுள்ளார்.
பரலோகம் இருக்கிறது என நம்புவது, கடவுளுக்கு நைவேத்யம் செய்வது, காணிக்கை அளிப்பது போன்ற அனைத்தும் பயனற்றது எனக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தியவர்கள் லோகாயதர்கள் என்றும் அதே மேதநிதி கூறியுள்ளார்.
வேதங்களை ஏற்க மறுத்ததோடு, அதனை மறுக்கவும் பிரச்சாரம் செய்தவர்கள் லோகாயதர்கள். இவர்களுடைய கருத்துகளுக்கு ஏகப்பட்ட செல்வாக்கும் அக்காலகட்டத்தில் உண்டு. ஆகவே வேதவாதிகள் புரட்டுப் பிரச்சாரம் பலிக்காமல் போன நிலையில் அவர்களை அழிப்பதன் மூலமும் அவர்களின் தத்துவ நூல்களை ஒழிப்பதன் மூலமும் வேதவாதிகள் தற்காலிக வெற்றியைச் சுவைத்தனர். இன்று, லோகாயதம் பற்றியோ, அதனைப் பின்பற்றிப் பிரச்சாரம் செய்து வெற்றி பெற்ற சார்வாகர்கள் பற்றியோ எந்த நூலும் இல்லாமல் அழித்து ஒழித்து விட்டனர்.
வேதக் கருத்துகளுக்கு முற்றிலும் முரணானதோர் அசுரக் கருத்தும் உண்டு என்று கண்ணன் தன் கீதை உபதேசத்தில் அர்ச்சுனனிடம் கூறியிருப்பதாக கீதை கூறுகிறது. தனக்கு எதிரானவர்களை அசுரர் எனச் சுட்டித் திட்டுவது வேதமோதிகளுக்கு வழக்கமானதுதான். என்றாலும் கூட, வேதமோதிகளால் முழுமையாகவும் புறக்கணிக்கப்பட முடியாதவர்களாக அவர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதை கீதை வாசகம் சுட்டிக்காட்டுகிறது அல்லவா?
அய்ந்து கணவர்களில் மூத்தவனான தர்மன் என்பானிடம் அவனின் தர்மபத்தினியான திரவுபதை பேசுகையில், அவனுடைய தந்தை திரவுபதன் லோகாயதத்தைப் பார்ப்பன ஆசிரியன் ஒருவனிடம் கற்றதாகக் கூறுகிறாள் என்று மகாபாரதம் கூறுகிறது. மகாபாரதத்தை அய்ந்தாம் வேதம் என்று வேதமோதிகள் புகழ்ந்து கூறுவர். பார்ப்பனர்கள் கற்கவேண்டிய கல்வித் திட்டத்தில் லோகாயதமும் இடம் பெற்றிருந்தது என்பதே அதன் தவிர்க்க இயலாத் தன்மையை எண்பிக்கும்.
லோகாயதத்தை விளக்கும் தத்துவ நூல் ஏதும் இன்றில்லை எனினும், அதனைத் தாக்குவதற்கு வேதமோதிகள் பயன்படுத்திய மேற்கோள் வசனங்களிலிருந்தும், வேதமோதிகளின் கருத்துகளிலிருந்தும் லோகாயதவாதம் என்பது இன்னதுதான், இப்படிப்பட்டதுதான் என்கிற அனுமானத்திற்கும் முடிவுக்கும் வரவேண்டி இருக்கிறது. இதனைப் பரபக்கவாதம் என்பார்கள்.
அந்த முறையில் லோகாயதவாதம் எனும் கடவுள் மறுப்புக் கொள்கைபற்றிய விவரங்களைக் கீழ்க்கண்டவாறு அறியலாம்.
சந்திரகீர்த்தி என்பார் எழுதிய பிரக்ஞ்ன சாத்திரம் எனும் நூலில் உலகாயத சாத்திரம் பற்றிய மேற்கோள் இடம்பெற்றுள்ளது.
திவ்யவதனம் எனும் பவுத்த நூலில் உலகாயதம் என்பது கல்வித்துறையின் ஒரு பிரிவே என்றும் அதற்கு உரையும் விளக்கமும் உண்டு என்றும் குறிப்பிடுகிறார்கள்.
மாத்வரின் சர்வ தரிசன சங்கிரகத்திற்குப் பின் இணைப்பு எனக் கருதக்கூடிய பிரபோத சந்திரோதயம், சர்வ சித்தாந்த சங்கிரகம் ஆகிய நூல்களிலும் லோகாயதத் தத்துவங்கள் குறிப்பிடப்பட்டிருப்பதைக் காணலாம்.
பவுத்த மத நூலான குததந்த சுத்தா எனும் நூலில் உலகாயதக் கொள்கைகள் பேசப்படுகின்றன.
அதைப்போலவே, பிரம்மஜல சுத்தா எனும் நூலில் லோகாயதவாதக் கொள்கைகள் இடம் பெற்றுள்ளன. (பாலி மொழியில் சுத்தா என்றால் வடமொழியில் சாத்திரம் எனப் பொருள்)
சுக்ரநீதிசாரம் நூல் கலை, விஞ்ஞானங்களைப் பட்டியலிடும்போது தர்க்கரீதியான விவாதங்களில் நாத்திகர்கள் வல்லவர்கள் எனக் குறிப்பிட்டுள்ளது. சர்வம் ஸ்வாயாபிகம் மதம் எனும் வரிகள் உலகாயதக் கொள்கையைக் காட்டுபவை. எல்லாமே இயற்கை விதிகளுக்குக் கட்டுப்பட்டு இயங்கும் என்று இதன் பொருள். கடவுள் என்ற ஏதோ ஒன்று எங்கோ குந்திக் கொண்டு இவ்வுலகத்தையும் உயிர்களையும் இயக்கிக் கொண்டிருக்கிறது என்பது தவறு.
இதையே வேறு வகையில் கவுடில்யன் (சாணக்யன்) அர்த்த சாத்திரத்தில் அன்விக்சிகி என்கிறார். அப்படியென்றால் தர்க்க விஞ்ஞானம் எனப் பொருள்.
மனுசாத்திரத்திற்கு உரை எழுதிய மேதாதி உலகாயதர்களின் (சார்வாகர்களின்) தர்க்கவித்யா (வாதம்புரியும் திறமை)பற்றி எழுதுகிறார். ஹேதுசாத்திரம் (தர்க்கம்) ஹேதுகர்கள் (தர்க்க அறிஞர்கள்) என்றெல்லாம் சார்வாகர்கள் பற்றிக் குறிப்பிடுகிறார். ஹேதுவாதி என்பது பகுத்தறிவாளர்களைப் பற்றிய தெலுகுச் சொல். இவர்களைத்தான் பிற்காலத்தில் புராணம் எழுதிய புரட்டர்கள் பாஷாண்டிகள் என்று ஏளனம் பேசினர்.
ஜெயந்த என்பார் எழுதிய நியாய மஞ்சரி எனும் நூலில் உலகாயதக் கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
லோகாயதம், உலகாயதம், தேகவாதம், சார்வாகம், சுபாவவாதம், நான்கு பூதவாதம் என எந்தச் சொல்லால் குறிப்பிட்டாலும் அவை ஒன்றையே குறிக்கின்றன. கடவுள் மறுப்பு, ஆத்மா மறுப்பு, மறுபிறப்பு முன்பிறப்பு மறுப்பு, மோட்ச நரகப் புரட்டை ஏற்க மறுப்பு போன்ற பகுத்தறிவுக் கண்ணோட்டமுடைய தத்துவத்தைக் குறிக்கும் சொற்களே! பொருள்முதல்வாதம், நாத்திகம் என்றெல்லாம் வழங்கப்படும் கொள்கைகளைக் குறிப்பிடும் சொற்களே!
வேதமோதிகள் இந்த உலகம் பஞ்சபூதங்களின் சேர்க்கை என்பார்கள். நிலம் நீர், தீ, காற்று, வானம் ஆகிய அய்ந்து பூதங்கள் (தனிமங்கள் ELEMENTS) என்பார்கள். லோகாயதவாதிகளான சார்வாகர்கள் இவை நான்கே தனிமங்கள்தான்.
நிலம், நீர், தீ. காற்று ஆகிய நான்கு தனிமங்கள் மட்டுமே உலகையும் உயிர்களையும் உருவாக்கியவை; வானவெளிக்கு வேலையே கிடையாது என்று உறுதிபடத் தெரிவித்துவிட்டனர்.
அபிதான சிந்தாமணி, சார்வாக மதம்பற்றி எழுதும்போது, இது நாஸ்திக மதம். கடவுளுக்கு மோட்ச அதிகாரமில்லை எனவும் உலகத்தில் உள்ளவரையில் சுகமாய் ஜீவிக்க வேண்டும் எனவும், மரணமே மோட்சம் எனவும், வேறு பிறப்பில்லை எனவும், பரலோக சுகமில்லை எனவும் ஆகாசம் நீங்கலாகத் தத்வம் நான்கு எனவும், இந்த நான்கு தத்வாமுதாயமே தேகம் எனவும் இவற்றால் ஆகிய இந்திரிய சமுதாயமே ஆத்மா எனவும் இந்திரிய நாசமே மரணம் எனவும் கூறும் என விளக்கம் தரப்பட்டுள்ளது. புலன்கள் ஒடுங்கிப் போனதுதானே இறப்பு?
வேதமோதிகளின் புரட்டுக் கற்பனைக் கருத்துகளுக்கு மாறான கருத்து என்பதால் சார்வாகர்களை எவ்வளவு கொச்சைப்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு இழிசொற்களைக் கொண்டு வருணித்துள்ளார்கள். அய்ந்தாம் வேதம் எனக் கூறப்படும் மகாபாரதக் கதையில் சார்வாகன் ஒருவனைக் கொல்லும் சம்பவம் வருகிறது. கவுரவர்களைக் கொன்று போரில் வென்று பாண்டவர்கள் முடிசூடிக்கொள்ள வரும்போது பார்ப்பனர்கள் கூடிநின்று வாழ்த்தினர். அப்போது சார்வாகன் முதல்வரிசைக்கு வந்து உரத்த குரலில், உங்கள் உறவினர்களையும் மூத்தோர்களையும் கொன்று தீர்த்துவிட்டீர்கள். அதன் மூலம் நீங்கள் அடைந்த பலன் என்ன? இரத்தவாடை வீசும் உடலுடன் அரியாசனத்தில் அமரப் போகிறீர்கள். நீங்களும் ஒருநாள் சாகத்தான் போகிறீர்கள் என்று கூறினான். உண்மையைக் கூறினான்.
தருமன் அதிர்ச்சியில் உறைந்துபோய் ஒன்றும் தோன்றாமல் நின்றுவிட்டான். வேதனைப்பட்டான். இரத்த வாடை வீசும் ஆட்சி கட்டிலில் அமர்வதற்குப் பதில் இறந்துபோய்விடலாம் என்கிற எண்ணம் மேலோங்கியது. ஆனால், குயுக்தியான மனமும் செயலும் கொண்ட பார்ப்பனர்கள், சார்வாகனை அரக்கன், மாயப் பிசாசு என்றும் கூறி மாறுவேடத்தில் வந்துள்ள துரியோதனனின் நண்பன் என்றும் கூறி அவன் கிடக்கட்டும் தரும ராஜாவே! நாங்கள் உங்களை வாழ்த்துகிறோம், ஆசீர்வதிக்கிறோம் எனப் பசப்பு மொழி பேசினர். தருமன் பார்ப்பனர்களுக்குப் பொற்காசுகளை வழங்குமாறு சைகை காட்டினான். தானம் நடந்தது. மனம் மகிழ்ந்த பார்ப்பனர்கள் சார்வாகனை நெய் கொதித்துக் கொண்டிருந்த கொப்பரையில் தள்ளித் துடிக்கத் துடிக்கக் கொன்றனர்.
வேதமோதிகளின் கருத்தை எதிர்க்கும் எவரையும் அசுரர்கள் என முத்திரை குத்திக் கொல்லும் கலை அவர்களின் கைவந்த கலை. வேத எதிர்ப்பைக் கையாளும் பாஷாண்டிகளுடன் பழக்கம் வைத்துக் கொள்ளக்கூடாது என்றே ஜாதிக்கட்டு போட்டுவிட்டார் மனு. இவர்களிடம் பேசினால், அவர்கள் தம் வாதங்களினால் மறு உலகம் என ஒன்று இல்டில என்பதை எண்பித்து விடுவார்கள் எனப் பயந்தனர். யாகங்களையும் வேதங்களின் அதிகார உயர்வையும் எதிர்த்து ஒன்றும் இல்லாமல் செய்துவிடுவார்கள் என்ற அச்சமே காரணம். லோகாயதவாதிகளின் பகுத்தறிவுவாதம் எதிர்மறையான அணுகுமுறையைக் கொண்டது என்று மனம்போன போக்கில் எதிர்ப்பு காட்டினர். மாத்வரின் துவைதம் இதைத்தான் காட்டுகிறது.
சத் தரிசன சமுச்சயம் என்ற நூலுக்கு விளக்கவுரை எழுதிய மணிபத்ர என்பவர், சுவர்க்கம் போவது, நன்மை தீமை பற்றிப் பகுத்தறிவது ஆகியவைபற்றி வேதமோதிகளான ஏமாற்றுக்காரர்கள் மக்களை பொய்த்தோற்றம் காட்டி ஏமாற்றுகின்றனர். இத்தகைய புரட்டுகளைத் தோலுரிப்பதற்காகத்தான்.