உடல்வழி சிந்தனைவழி என்று இரண்டு வகையில் இதைப் பற்றி யோசிக்கலாம். ஒருவர் இறந்த பின் மீண்டும் உயிர்பெற்று இவ்வையகத்தில் பிறப்பது அல்லது சிந்தனையில் பெரும் மாற்றம் ஏற்பட்டு எண்ணத்தில் செயலில் தன்னைத் தானே உருமாற்றிக் கொள்வது.
மஹாபாரதத்தில் பாண்டவர்கள் வனவாசம் போவதற்கு முன், வனவாசத்திற்கு பின் என்று சிந்தனையில் பெரிய மாற்றம் கொண்டிருந்தனர்.
வனவாசத்திற்கு முன் பாண்டவர்களிடம் திமிர், தாம் பேரரசை ஆள்கிறோம் என்ற பகட்டு, சூதாடுவது அதுவும் தன் தம்பிகளை முதலில் வைத்து ஆடாமல் சித்தி மகனான நகுலனை வைத்து ஆடுவது, யாருமே கட்டாத வடிவத்தில் சிறந்த மாளிகை கட்ட பெரிய காட்டை அழிப்பது என எல்லாவகையான குணாதிசயங்களை கொண்டிருந்தனர்.
வனவாசத்திற்குப் பின் இந்த குணங்களில் மாற்றம் ஏற்பட்டு நல்ல மனித நேயமுள்ளவர்களாக திரும்பி வந்தனர்.
எந்த நகுலனை வைத்து தர்மன் சூதாடினாரோ அதே நகுலனை காட்டில் நடந்த பிரச்சனையில் தம்பிகளை முதலில் காப்பற்ற வேண்டும் என தோன்றாமல் நகுலனைக் காப்பாற்றுகிறார்.
இதுவே மறுபிறவி எடுத்தது போல்தான். இப்போது, இங்கு, இந்த நாட்டில், மறுபிறவி எடுப்பது என்பது பற்றி தவறான கருத்தை திணித்துக் கொண்டிருக்கின்றனர்.
மறுபிறவி எடுப்போம் சிந்தனையில், செயலில்.