சீதையை தேடி ராமனும் லட்சுமணனும் காட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்கள். சாப்பிடாமலும் தூங்காமலும் இருவரும் வெகு நாட்களாக நடக்கின்றனர். அப்போது சபரி என்ற பெண் இவர்களை அணுகி ராமனைப் பார்த்து நில் என்று சொல்ல ராமனும் எதுவும் பேசாமல் நின்றான். பின் கிழே உட்கார் என்றதும் ராமனும் கிழே அமர்ந்தான். அந்தப் பெண் ராமனை நோக்கி நீ இப்போது பசியோடு மிகவும் களைப்பாக இருக்கிறாய், நான் உனக்கு பழங்கள் தருகிறேன், சாப்பிட்டு சிறிது நேரம் இளைப்பாறி விட்டுச் செல் என்றாள்.
பின் தன் கையில் இருந்த பழத்தை சிறிது கடித்து விட்டு ராமனிடம் தந்தாள். இரண்டாவது பழத்தை கடித்தாள். தூர வீசினாள். மூன்றாவது பழத்தை கடித்துப் பார்த்து லட்சுமணனிடம் தந்தாள்.
லட்சுமணன் இதைக் கண்டு மிகவும் கோபம் அடைந்து நீ காட்டில் வாழும் ஒரு அரக்கி, நீ கடித்த பழத்தை எப்படி எனக்கு கொடுக்கலாம். இது பரவாயில்லை. எப்படி என் அண்ணன் அயோத்தியின் இளவரசன் ராமனுக்கு கொடுக்கலாம். உன் வாயில் இருந்த எச்சி விஷமாகக் கூட இருக்கலாம், அதைச் சேர்த்து எப்படி தரலாம் என்று அவளைத் திட்டினான்.
அதற்கு ராமன் லட்சுமணனை நோக்கி காட்டில் மிகுந்த ஆயுதங்களுடன் நாம் இருப்பதை பார்த்தால் எந்த பெண்ணும் நம்மை அணுக மாட்டாள். அப்படி இருக்க இவள் நம் எதிரே வந்தாள் என்றாள் இவள் வீரமிக்கவள். நம்மை தாக்குவதற்குப் பதில் பணிவாக பேசி உண்ண உணவு கொடுக்கிறாள் என்றாள் இவள் பாசமிக்கவள். அதனால் தான் அவள் சொல்வதற்கேல்லாம் நான் மறுப்பேதும் சொல்லவில்லை.
முக்கியமாக அரண்மனையில் கிடைக்கிற வசதியை நீ எப்படி இவளிடம் எதிர்பார்க்கலாம் ? நான் மன்னன் என்று அவளுக்கேப்படி தெரியும். நாட்டில் தானே நான் மன்னன். இங்கே இப்போது நான் ஒன்றும் இல்லாதவன் தானே. நீ அரண்மனையில் எப்படி இருக்கிறாயோ அதே பார்வை கொண்டு அவளைப் பார்க்கிறாய். அது தவறு, அந்த கண்ணோட்டத்தோடு பார்க்காதே என்று சொல்லி அதனால் தான் நீ லட்சுமணனாகவும், நான் ராமனாகவும் இருக்கிறோம் என்றான்.
எல்லாமே நாம் பார்க்கும் பார்வையில் இருக்கிறது.