Wednesday, April 17, 2013

பார்வை


சீதையை தேடி ராமனும் லட்சுமணனும் காட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்கள். சாப்பிடாமலும் தூங்காமலும் இருவரும் வெகு நாட்களாக நடக்கின்றனர். அப்போது சபரி என்ற பெண் இவர்களை அணுகி ராமனைப் பார்த்து நில் என்று சொல்ல ராமனும் எதுவும் பேசாமல் நின்றான். பின் கிழே உட்கார் என்றதும் ராமனும் கிழே அமர்ந்தான்.  அந்தப் பெண் ராமனை நோக்கி நீ இப்போது பசியோடு மிகவும் களைப்பாக இருக்கிறாய், நான் உனக்கு பழங்கள் தருகிறேன், சாப்பிட்டு சிறிது நேரம் இளைப்பாறி விட்டுச் செல் என்றாள்.

பின் தன் கையில் இருந்த பழத்தை சிறிது கடித்து விட்டு ராமனிடம் தந்தாள். இரண்டாவது பழத்தை கடித்தாள். தூர வீசினாள். மூன்றாவது பழத்தை கடித்துப் பார்த்து லட்சுமணனிடம் தந்தாள்.

லட்சுமணன் இதைக் கண்டு மிகவும் கோபம் அடைந்து நீ காட்டில் வாழும் ஒரு அரக்கி, நீ கடித்த பழத்தை எப்படி எனக்கு கொடுக்கலாம். இது பரவாயில்லை. எப்படி என் அண்ணன் அயோத்தியின் இளவரசன் ராமனுக்கு கொடுக்கலாம். உன் வாயில் இருந்த எச்சி விஷமாகக் கூட இருக்கலாம், அதைச் சேர்த்து எப்படி தரலாம் என்று அவளைத் திட்டினான்.

அதற்கு ராமன் லட்சுமணனை நோக்கி காட்டில் மிகுந்த ஆயுதங்களுடன் நாம் இருப்பதை பார்த்தால் எந்த பெண்ணும் நம்மை அணுக மாட்டாள். அப்படி இருக்க இவள் நம் எதிரே வந்தாள் என்றாள் இவள் வீரமிக்கவள். நம்மை தாக்குவதற்குப் பதில் பணிவாக பேசி உண்ண உணவு கொடுக்கிறாள் என்றாள் இவள் பாசமிக்கவள். அதனால் தான் அவள் சொல்வதற்கேல்லாம் நான் மறுப்பேதும் சொல்லவில்லை.

முக்கியமாக அரண்மனையில் கிடைக்கிற வசதியை நீ எப்படி இவளிடம் எதிர்பார்க்கலாம் ? நான் மன்னன் என்று அவளுக்கேப்படி தெரியும். நாட்டில் தானே நான் மன்னன். இங்கே இப்போது நான் ஒன்றும் இல்லாதவன் தானே. நீ அரண்மனையில் எப்படி இருக்கிறாயோ அதே பார்வை கொண்டு அவளைப் பார்க்கிறாய். அது தவறு, அந்த கண்ணோட்டத்தோடு பார்க்காதே என்று சொல்லி அதனால் தான் நீ லட்சுமணனாகவும், நான் ராமனாகவும் இருக்கிறோம் என்றான்.

எல்லாமே நாம் பார்க்கும் பார்வையில் இருக்கிறது.


Thursday, April 11, 2013

வாழ்க்கையே அலை போலே

வாழ்க்கையே அலை போலே நாமெல்லாம் கரை மேலே
ஓடம் போலே மகன் வந்து சேர்ந்தான் வாழ்நாளிலே!!!

அன்பு என்னும் காற்றிலே அறிவு கலந்த மூச்சிலே
தாயும் தந்தையும் கூடுவார்... அகம் மகிழ்வார்... பிரம்மம் காணுவார்...
நாளை உலகில் பிறக்கும் உயிரை... யாம் காணுவோம்.

..வாழ்க்கையே அலை போலே

வாழ்க்கை இப்போ செழிப்பதேன்
மகனை கண்டு மகிழ்வதேன்
மழலை இன்று தவழுமா... நாளை தாவுமா... முகம் காணுமா...
காலம் நமக்கு பதில் சொல்லுமிங்கே ... யாம் காணுவோம்.

..வாழ்க்கையே அலை போலே

பாசத்தின் அளவு மீறினால்
மகனின் ஓட்டம் மேவுமோ
வாழ்வில் துன்பம் வரவு...சுகம் செலவு...இருப்பது கனவு
காலம் கடந்த மகனின் வாழ்வை... யாம் காணுவோம்.

..வாழ்க்கையே அலை போலே

Thursday, March 21, 2013

பசுவும் பன்றியும்

பசு உயிருடன் இருக்கும் போது மனிதனுக்கு பால் தந்து உதவுகிறது. அதற்கு பிரதிபலனாக அதை பராமறிப்பதும் காலநேரம் பார்த்து உணவு அளிப்பதும் மனிதன் பார்த்துக் கொள்கிறான்.

பன்றி இறந்த பின் உணவாகவும், பின் அதன் தோலை சுத்தம் செய்து மனிதன் பயன் படுத்திக் கொள்கிறான்.

இங்கே இரண்டுமே மனிதனுக்கு பயன்பட்டாலும் உயிருடன் இருக்கும்போது உதவுகின்ற பசுவுக்கு கிடைக்கின்ற மரியாதை பன்றிக்கு கிடைப்பதில்லை.

ஆக வாழ்க்கையில் உயிருடன் இருக்கும் போதே பிறருக்கு பயனுள்ள வாழ்க்கை வாழ வேண்டும்.

Wednesday, March 20, 2013

அகத்தாய்வு

ஒவ்வொரு மனிதனும் தன்னை அகத்தாய்வு செய்து மூன்றாவது மனிதனை கண்டுகொள்ள வேண்டும். யாரந்த மூன்றாவது மனிதன் ?

என்னைப் பற்றி நான் என்ன நினைக்கிறேன் என்பது முதல் மனிதன், என்னைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பது இரண்டாவது மனிதன், நம் இருவருக்கு நடுவில் இருக்கும் மூன்றாவது மனிதனை ஒவ்வொருவரும் அடையாளன் கொண்டு வந்தால் இந்த நாட்டில் பிரச்சனைகள் வர வாய்ப்பில்லை.

தி மு க ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லிவிட்டு ஊர் திரும்பிய தென்மாவட்ட கட்சி தொண்டர்களின் வண்டி விபத்துக்குள்ளாகி சிலர் உயிருக்கு போராடினர். அதிகாலை என்பதால் யாரும் கவனிக்கவில்லை. சிறிது நேரத்தில் அங்கு வந்த சில இளைஞர்கள் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று எல்லா வசதிகளையும் செய்து கொடுத்து அவர்கள் உறவினருக்கும் சொல்லி அவர்கள் தங்க இடமும் உணவும் கொடுத்து குணமாகி மீண்டும் ஊருக்கு செல்லும் வரை பார்த்துக் கொண்டனர். விபத்தில் சிக்கியவர்கள் தி மு க வைச் சேர்ந்தவர்கள். அவர்களை காப்பாற்றியவர்கள் அ தி மு க வைச் சேர்ந்தவர்கள். கட்சி பெரிதல்ல மனிதம் தான் பெரியது என்று நினைத்ததால் இவர்கள் காப்பாற்றப் பட்டார்கள்.

மதுரையில் இமாம் அலி ஹைதர் அலி என்ற தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த இருவர் காவல் துறையினரை சுட்டுவிட்டு தப்பி ஓடினர். பைபாஸ் சாலை வழியாக ஓடும் அவர்களை காவல்துறையினர் பின்னால் துரத்திக் கொண்டு வந்தனர். இப்படி துரத்தும் வேளையில் பக்கத்தில் இருந்த பள்ளிக் கூடத்திலிருந்து குழந்தைகள் வெளியே வர அதில் இரு குழந்தைகள் தவறி கீழே விழுந்து விட்டனர். ஓடிக் கொண்டிருந்த தீவிரவாதி இரு குழந்தைகளையும் தூக்கி சாலையின் ஓரமாக விட்டுவிட்டு மீண்டும் ஓடத் தொடங்கினர்.

ஒரு வயதான பாட்டி உடம்பு சரியில்லாமல் கஷ்டப்பட்டார். பக்கத்து வீட்டிலிருந்தவர் ஆட்டோவை அழைத்து வரச் சென்றார். நடுராத்திரி என்பதால் 30 ரூபாய் வாங்க வேண்டிய சவாரிக்கு 250 ரூபாய் கேட்டான் அந்த ஆட்டோ ஓட்டுனர். வேறு வழியில்லாமல் ஒத்துக்கொண்டு அழைத்து வந்தார். பாட்டியை தூக்கி ஆட்டோவில் வைக்க உதவினான் ஆட்டோ ஓட்டுனர். மருத்துவமனைக்கு சென்று ஆட்டோவிலிருந்து தூக்கி உள்ளே அழைத்துச் செல்லவும் உதவினான். இப்போ பைசா கொடுத்த போது வாங்க மறுத்தவனாய் இது பாட்டிக்கு செய்த உதவியாக இருக்கட்டும் என்றான் அவன். அதிக பணம் கேட்டது முதல் மனிதன். மூன்றாம் மனிதன் விழித்துக் கொண்டது மருத்துவமனையில் (தென்கச்சி சுவாமி நாதன் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சி).

மனசு


மனசை அடக்க நினைத்தால் அலையும். அறிய நினைத்தால் அடங்கும்.

அதனால் மனசை அடக்க முயற்சிப்பது அதனோடு போராடுவதேல்லாம் முடியாத காரியம். ஒருவன் மனசை அடக்குவேன் என்று மரத்தடியில் உட்கார்ந்து தவம் பண்ணினான். தினமும் காலை 8 மணிக்கு அந்த வழியாக நடனம் கற்றுக்கொள்ளும் ஒரு பெண் கடந்து செல்வது வழக்கம். முதல் நாள் இவன் தவம் இருக்கும் போது இந்தப் பெண் கடந்து செல்வதை கண்டான். ஆஹா மனசை கட்டுப்படுத்தலாம்னு இங்க வந்தா இவள் நடந்து போறத பார்க்கிறோமே என்று ஒரு துணியை எடுத்து கண்ணைக் கட்டிக்கொண்டான். மறுநாள் அந்த பெண் நடந்து வர அவளின் கொலுசு சத்தம் இவன் காதில் விழுந்தது. இவனோ ஒரு துணியை எடுத்து காதை பொத்திக் கொண்டான். மறுநாள் அவள் தலையில் அணிந்திருந்த மல்லிகைப்பூ மனத்தை மூக்கு நுகர்ந்தது. உடனே இவன் இன்னொரு துணியை எடுத்து மூக்கையும் அடைத்துக் கொண்டான். இனிமேல் மனசை சுலபமாக கட்டுப்படுத்தலாம் என்று யோசித்தவனாக தவத்தை தொடர்ந்தான். மறுநாள் 8 மணியானதும் இந்நேரம் அவள் நடந்து போயிருப்பாள் என்று இவன் மனம் யோசிக்க ஆரம்பித்ததாம்.

அதனால் மனசை கட்டுப்படுத்த முடியாது. ஒன்று அதை விட்டு விலகி வரணும். இல்லை அதைப் பற்றி அறிய முற்படனும்.

Tuesday, March 19, 2013

கொலை - தற்கொலை



பாரதப் போரில் கர்ணன் கை ஓங்க தருமரை ஓட ஓட விரட்டினான். தன் முகாமிற்கு திரும்பி வந்த தர்மர் மிகுந்த கோபத்துடன் தூதுவனை அழைத்து அர்ஜுனனிடம் சென்று எப்படியாவது கர்ணனை கொன்று விட்டு வருமாறு சொல் என்றார். ஆனால் கர்ணனை கொல்ல அம்பு தொடுத்த அர்ஜுனன் என்னால் கர்ணனை கொல்ல முடியவில்லை, கர்ணனின் முகம் என் அண்ணன் தர்மர் போல் தோன்றுகிறது, அவன் தோள் என் அண்ணன் பீமன் போல் இருக்கிறது, அவன் பாதங்கள் என் தாயின் பாதங்களைப் போல் இருக்கிறது என்று முகாமிற்கு திரும்புமாறு கிருஷ்ணனுக்கு ஆணையிட்டான்.

கர்ணனை கொல்லாமல் முகாமிற்கு வந்த அர்ஜுனனை கண்டு தர்மர் மிகவும் கொதித்துப் போய் அர்ஜுனனின் வில்லையும் அம்பையும் இழித்து ஏளனமாக பேசினார். தன் வில்லையும் அம்பையும் ஏளனமாய் யார் பேசினாலும் கொள்வேன் என்று அர்ஜுனன் ஏற்கனவே சத்தியம் செய்திருந்தான். அதனால் கோபமுற்ற அர்ஜுனன் தருமரை நோக்கி உங்களை கொள்வேன் அப்படியே நானும் தற்கொலை செய்து கொள்வேன் என்று சபதம் எடுத்தான். வில்லை எடுத்து அம்பு தொடுக்க ஆயத்தமானான். அப்போது கிருஷ்ணன் இடையில் புகுந்து, கர்ணன் உன் அண்ணனைப் போல் தோன்றுவதால் அவனை கொல்ல மனமில்லை என்று சொல்லிவிட்டு இங்கே வந்தாய். இப்போ உன் அண்ணனையே கொல்ல துணிந்து விட்டாயே எனக்கேட்டான். அதற்கு அர்ஜுனன் நான் சத்தியம் செய்துவிட்டேன். அதனால் கண்டிப்பாக என் அண்ணனை கொலை செய்ய வேண்டும், அவரும் இறந்து விடுவார், பின் அண்ணனை பரிந்து நானும் உயிரோட இருக்க மாட்டேன் தற்கொலை செய்து கொள்வேன் என்றான்.

அதற்கு கிருஷ்ணன், உன் அண்ணனை கொலை செய்ய வேண்டும் ஆனால் அவர் உயிருடன் இருக்க வேண்டும் அவ்வளவு தானே! நான் அதற்கு ஒரு வழி சொல்கிறேன் கேட்பாயா என்றான். அர்ஜுனனும் சம்மதித்தான். உன் அண்ணனை நீ வா போ என்று ஒருமையில் மரியாதை இல்லாமல் பேசு, அப்படி பேசினால் கொலை செய்வதற்கு சமம் என்றான். அர்ஜுனனும் அப்படி பேசினான். கொலை செய்வேன் என்று சொன்ன சத்தியத்தை காப்பாற்றி விட்டோம் என சந்தோசப் பட்டான் அர்ஜுனன். இப்போ தற்கொலை செய்வேன் என்று சபதம் எடுத்தேனே அதற்கு என்ன செய்ய வேண்டும் எனக்கேட்டான். அதற்கு கிருஷ்ணன் உன்னையே நீ உயர்வாகவும் தற்பெருமையாகவும் பேசு. அது தற்கொலைக்கு சமம் என்றான். அர்ஜுனனும் என் வில்லைவித்தைக்கு இணை யாரும் இல்லை. நான் பெரியவன், என்னை நம்பி தான் இந்த பாராத போர் நடக்கிறது என்று பெருமையாக பேசிக் கொண்டான்.

இவ்வாறு நீ வா போ என்று பேசினால் கொலைக்கு சமம் என்றும் தற்பெருமையாக பேசினால் தற்கொலைக்கு சமம் என்றும் விளக்கம் அழித்தான் கிருஷ்ணன்.

அரிய குணம் - டால்ஸ்டாய் - அஷுடோஷ் முகர்ஜி

டால்ஸ்டாய் (Tolstoy) உலகப்புகழ் பெற்ற மிக அருமையான எழுத்தாளர். சிந்தனையாளர்.  இவரின் "போரும் சமாதானமும்" மிகவும் புகழ் பெற்றது. இவரிடம் மிகவும் அரிதான குணாதிசயம் இருந்தது.  இவர் தன் எழுத்தினால் பெறும் வருமானம் போதாது என்பதால் வேறு உடல் உழைப்பு செய்து சம்பாதிப்பார்.

ஒருமுறை டால்ஸ்டாய் ரயில் நிலையத்திற்கு ஒரு வேலையாக வந்திருந்தார். அப்போது ஒரு பெண் இவரிடம் தன் கணவர் தண்ணீர் எடுக்க கீழே இறங்கியதாகவும் இன்னும் வரவில்லை என்றும் கண்டுபிடித்து கொடுத்தால் பணம் தருவதாகவும் சொன்னாள். இவரும் அலைந்து திரிந்து அவள் கணவரை கண்டுபிடித்து அவளிடம் சேர்த்தார். அவள் சொன்னபடி பணம் நீட்ட இவரும் வாங்கிக் கொண்டு கிளம்பினார். அப்போது நிலையத்தில் இருந்த ஊழியர் அந்த பெண்ணைப் பார்த்து இவர் யாரென கூற உடனே அந்தப் பெண் ரயிலிலிருந்து கீழிறங்கி மன்னிப்பு கேட்டாள். அதற்கு டால்ஸ்டாய் கொடுத்த பணத்தை திரும்ப கேட்காதே. ஏன்னா அது என் உடலுழைப்பால் சம்பாதித்தது. தரமாட்டேன் என்றார். தன் கௌரவத்தை பற்றி கவலைப்படாமல் எந்த வேலையையும் செய்ய தயாராக இருந்தார். 

கொல்கொத்தாவில் பிறந்து வளர்ந்த அஷுடோஷ் முகர்ஜி (Ashutosh Mukherjee) என்பவர் ஒரு பிராமணர். தலைமை நீதிபதியாக இருந்தவர். இவர் காலை 4 மணிக்கே எழுந்து கங்கை நதியில் நீராடிவிட்டு ஈரத்துணியுடன் வீடுவரை நடந்து வருவதை வழக்கமாக வைத்திருந்தார். 

ஒரு நாள் அவர் நீராடிவிட்டு திரும்பி வரும்போது வயதான பாட்டி சிறப்பு பூஜை செய்துவிட்டு ஒரு ஏதும் இல்லாத ஏழை பிராமணன் ஒருவனுக்கு தானம் பண்ணவேண்டும் என்று காத்திருந்தாள். அந்த நேரம் இவர் அங்கு வர தானம் வாங்கிச் செல்லுமாறு கேட்டாள். நீதிபதியும் அதன்படியே தானம் வாங்கிவிட்டு செல்லும்போது அவரை பற்றி அருகில் இருந்தவர்கள் இவர் தலைமை நீதிபதி இவருக்கு போய் தானம் செய்தாயே என்று கூறினர்.

பாட்டி மன்னிப்பு கூறினாலும் நீதிபதியோ உனக்கு வேண்டியது தானம் பண்ணவேண்டும். பண்ணினாய், நானும் வாங்கிக்கொண்டேன். திரும்ப கேட்க கூடாது என்றார்.

இருவேறு கால கட்டத்தில் வேவ்வேறு இடங்களில் வாழ்ந்த இந்த இருவரின் செயலும் ஒரே மாதிரியாக இருக்கிறது. இது அரிய குணங்களில் ஒன்று.